தமிழ்நாடு

ஓர் அரசியல் தலைவன் என்பவன்..: குட்டிக்கதையுடன் உரையை நிறைவு செய்த விஜய் | TVK Vijay | Madurai

ஒரு நாட்டிற்கு திறமை எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு உண்மையும், நேர்மையும் முக்கியம்.

ராம் அப்பண்ணசாமி

ஓர் அரசியல் தலைவன் சினிமாக்காரனா என்பது முக்கியமல்ல உண்மையானவனா என்பதே முக்கியம் என்று குறிப்பிட்டு ஒரு குட்டிக் கதையுடன் தனது உரையை தவெக தலைவர் விஜய் நிறைவு செய்தார்.

மதுரையின் இன்று (ஆக. 21) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில் விஜய் தன் உரையில் நிறைவாக பேசியதாவது,

`சொல் அல்ல முக்கியம் செயல்தான் முக்கியம். நல்லது செய்ய மட்டும்தான் இந்த விஜய். ஓர் அரசியல் தலைவன் என்பவன் சினிமாக்காரனா, நல்லவனா, கெட்டவனா என்பதை தாண்டி, உண்மையானவனா என்பதுதான் முக்கியம்.

இது சம்மந்தமாக ஒரு குட்டிக்கதை ஒன்றை கூறுகிறேன். ஒரு நாட்டில் ஒரு ராஜா தனக்கு பக்கபலமாக இருப்பதற்காக ஒரு தளபதியை தேடினார். சரியான தகுதிகளுடன்கூடிய ஒரு பத்து நபர்கள் தேர்வாகினார்கள். ஆனால் அவர்களில் ஒருவரை மட்டுமே தேர்தெடுக்க முடியும். இதனால் அந்த ராஜா ஒரு தேர்வை வைத்தார்.

அந்த பத்து பேரிடமும் விதை நெல் கொடுக்கப்பட்டது. இதை நன்றாக வளர்த்து ஒரு மூன்று மாதங்கள் கழித்துக்கொண்டு வாருங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டது. மூன்ற மாதங்கள் கழித்து அவர்கள் வந்தபோது அதில் ஒருவர் ஆள் உயரத்திற்கு வளர்த்திருந்தார், ஒருவர் தோள் உயரத்திற்கு வளர்த்திருந்தார்.

அவர்களில் ஒன்பது பேர் நன்றாக வளர்த்துகொண்டு வந்திருந்தனர். ஒருத்தர் மட்டும் வெறும் தொட்டியுடன் வந்திருந்தார். நானும் தண்ணீர் ஊற்றினேன் உரம் வைத்தேன் வளரவில்லை என்றார். உடனே அவரை கட்டியணைத்த ராஜா, நீதான் என் தளபதி அனைத்து அதிகாரமும் உனக்குத்தான் என்றார்.

ஏனென்றால் அந்த பத்து பேரிடமும் ராஜா கொடுத்தது அவித்த விதை நெல். அது முளைக்கவே முளைக்காது. அந்த ஒன்பது திருட்டு பயல்களும் வேறு விதை நெல்லை வாங்கி ராஜாவையும், மக்களையும் ஏமாற்றியுள்ளனர். எனவே ஒரு நாட்டிற்கு திறமை எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு உண்மையும், நேர்மையும் முக்கியம்.

அனைத்து அரசியல்வாதிகளும் அறிவாளிகள் அல்ல, சினிமாக்காரர்கள் முட்டாள்கள் அல்ல’ என்றார்.