நீங்கள் நடத்தும் இந்த ஆட்சியில் நேர்மை இருக்கிறதா? நியாயம் இருக்கிறதா? ஊழல் இல்லாமல் இருக்கிறதா? பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மதுரை மாநாட்டில் வைத்து முதல்வர் ஸ்டாலினிடம் தவெக தலைவர் விஜய் எழுப்பியுள்ளார்.
மதுரை பாரபத்தியில் இன்று (ஆக. 21) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில் விஜய் பேசியதாவது,
`தற்போது ஆட்சியில் இருக்கும் வெற்று விளம்பர மாடல் திமுக என்ன செய்கிறது என்று தெரியுமல்லவா? உள்ளுக்குள் உறவு வைத்துக்கொண்டு வெளியே எதிர்ப்பதுபோல நாடகம் ஆடுகிறது. இது மட்டுமா? ஒரு ரெய்டு வந்துவிட்டால்போதும் இதுவரை போகாத ஒரு கூட்டத்திற்குச் சென்று அங்கே ஒரு ரகசிய கூட்டம் நடத்தப்படுகிறது.
அந்த கூட்டத்திற்குப் பிறகு பிரச்னை அப்படியே காணாமல் போய்விட்டது. ஸ்டாலின் அங்கிள் வாட் அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள். உங்களுக்கு மனசாட்சி என ஒன்று இருந்தால் நாங்கள் கேட்கும் கேள்விக்கு மட்டும் கொஞ்சம் பதில் கூறுங்கள் அங்கிள்.
நீங்கள் நடத்தும் இந்த ஆட்சியில் நேர்மை இருக்கிறதா? நியாயம் இருக்கிறதா? ஊழல் இல்லாமல் இருக்கிறதா? சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறதா? பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? பொது மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இயற்கை வளங்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? பதில் கூறுங்கள் அங்கிள்.
டாஸ்மாக்கில் மட்டும் இதுவரை ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் என்று கூறுகிறார்கள். அதில் மட்டும்தான் தவறு இருக்கிறதா? வேறு எதில்தான் தவறு இல்லை? பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டால் போதுமா? படிக்கும் இடத்தில், வேலைக்குச் செல்லும் இடத்தில் பாதுகாப்பு இல்லை என்று பெண் பிள்ளைகள் கதறுகிறார்கள்.
அந்த கதறல் சத்தம் உங்கள் காதில் கேட்கிறதா? இதில் உங்களை அவர்கள் அப்பா என்று அழைப்பதாக சொல்கிறீர்கள். வாட் இஸ் திஸ் அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள். பெண்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைவருக்கும் பொய்யான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
எப்படிக் கேட்டாலும் இவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவது இல்லை. இருந்தால்தானே வரும். மக்களே நீங்கள் சொல்லுங்கள்.. உண்மையை சொல்லுங்கள்.. செய்வோம் செய்வோம் என்று சொன்னார்களே.. மக்களே சொன்னதை எல்லாம் செய்தார்களா?
கூடிய விரைவில் மக்களை சந்தித்து மனம்விட்டுப் பேசப்போகிறேன். அப்போது மக்களின் இந்த முழக்கம் இடி முழக்கமாக மாறும். அந்த இடி முழக்கம் தமிழகத்தின் போர் முழக்கமாக மாறும். அந்த போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம்கூட தூங்கவிடாது.
ஒட்டுமொத்தமாக அனைவரும் இணைந்து இந்த கபட நாடக திமுக ஆட்சியை 2026 தேர்தலில் வீட்டிற்கு அனுப்புவோம்’ என்றார்.