வேலூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு  
தமிழ்நாடு

கரூர் சம்பவத்தில் என் மீது ஏன் பழியைப் போட்டீர்கள்?: வேலூரில் உணர்ச்சிவசப்பட்ட விஜய் | TVK Vijay |

அறிவாலயத்திற்கு அருகில் நடந்து செல்வபர்களையும் கூட்டணிக்குள் சேர்த்து கல்லாப் பேட்டிக் கூட்டணியை உருவாக்கி வருகிறார்கள்...

கிழக்கு நியூஸ்

அறிவாலயத்திற்கு அருகில் நடந்து செல்பவர்களைக் கூட அழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார் என்று தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்தார்.

வேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். தனது உரையைத் தொடங்கும்போது காளையை அடக்குவது தொடர்பாக குட்டிக் கதை ஒன்றைக் கூறிய விஜய், அடக்க முடியாமல் இருக்கும் காளை தமிழ்நாடு தேர்தல் களம், அதைப் புல்லைக் கொடுத்து அடக்கும் சிறுவன் தவெக கட்சி. அவனைப் பாராட்டுபவர்கள் தமிழ்நாட்டு மக்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:-

ஆட்சி அமைந்தவுடன் அனைவரையும் சந்திப்பேன்

“மக்களை நேசிக்கும் நல்ல தலைமை இல்லாததால் இத்தனை ஆண்டுகளாக ஸ்டாலின் சார் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த மக்களுக்கு சரியான நேரத்தில் வெகுஜன மக்கள் இயக்கமாக வந்ததுதான் தவெக. எதிர்க்கட்சியாக நின்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் என்னவெல்லாம் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இதற்கு நடுவில் நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி தருகிறேன். நமது ஆட்சி அமைந்தவுடன் நான் கிராம்தோறும் வந்து என் சொந்தங்களை நேரில் சந்திப்பேன்.

விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர்

சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு உருட்டு ஒன்றை உருட்டினார். அதாவது இது தமிழ்நாட்டிற்கும் தில்லிக்குமான தேர்தல் என்று கூறினார். ஏன் ஸ்டாலின் சார் நீங்கள் தில்லியில் சென்று தேர்தலில் நிற்கப் போகிறீர்களா? அல்லது இது நாடாளுமன்றத் தேர்தலா? எந்தத் தேர்தலை எப்படிக் கையாள வேண்டும் என்று மக்களுக்குத் தெரியும். அந்த அளவுக்குத் தெளிவானவர்கள். உண்மையிலேயே இந்தத் தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் எதிரான போர். மக்களுக்கும் லஞ்சத்திற்கும் எதிரான போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் உங்கள் ஆட்சிக்கும் எதிரான போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் எதிரான போர். விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் எதிரான போர். ஏனென்றால் விஜய்தான் தமிழ்நாடு. தமிழ்நாடுதான் விஜய்.

தமிழ்நாடு காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் காலத்தில் சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருந்தது. இப்போது சூப்பர் ஸ்டாண்ட் அப் காமெடி ஸ்டார் மாநிலமாக ஆகிவிட்டது. இப்போது நடக்கப்போவது ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் நடக்கும் தேர்தல் போல் அல்ல. ஐம்பதாண்டு கால அரசியலுக்கான அற்புத தேர்தல். இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து விஜயை எதிர்க்கிறார்கள். ஏனென்றால் விஜய் ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிராகவும், மக்களுக்கு ஆதரவாகவும் நிற்கிறான். அந்தக் கடுப்புதான்.

உங்கள் சொந்தங்கள்தான் வேட்பாளர்

இந்தத் தேர்தலில் உங்கள் வீட்டில் இருக்கிற ஒரு விஜி தான் வேட்பாளராக நிற்கப் போகிறார்கள். உங்கள் சொந்தம் தவெக வேட்பாளர் என்றால் உங்கள் வாக்குகள் விசில் சின்னத்திற்குத் தானே. இது தெரிந்ததனால்தான் எதிரிகள் என் மீது அவதூறு கிளப்புகிறார்கள். என் மீது அவதூறு பரப்பினால் அது மக்கள் மீது அவதூறு பரப்புவது போன்றது. எனக்கு எதிராகச் செய்யும் செயல்கள், மக்களுக்கு எதிரானவை. விஜயும் மக்களும் ரத்தமும் சதையும் போல. பிரிக்கவே முடியாது. அப்படிபப்ட்ட சென்ஸிடிவான சென்டிமென்ட் அது. இதை யாரும் அசைக்க முடியது. மக்களை நேசிக்கும் விஜயை நம்புகிறீர்களா? ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களா என்பதற்கு இதுதான் சாட்சி.

சொத்து மதிப்புகளை வெளியிட முடியுமா?

இப்போதிருக்கும் அரசியல்வாதிகளிடம் உங்கள் சார்பாக ஒரு கேள்வி கேட்கிறேன். அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் இருந்த சொத்து எவ்வளவு? அரசியலுக்கு வந்த பிறகு சேர்த்த சொத்து எவ்வளவு, அதை எந்தத் தொழில் செய்து எப்படிச் சம்பாதித்தீர்கள் என்பதை எல்லாம் வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? இதையெல்லாம் கேட்டால் என் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள்.

கரூர் சம்பவத்தில் ஏன் பழி போட்டீர்கள்?

சமீபத்தில் எனக்குப் புதிய நண்பர் ஒருவர் கிடைத்திருக்கிறார். அதுதான் நம் ஸ்டாலின் சார். ஏனென்றால் அவரிடம் கேட்டதற்கு எனக்கு எதிரிகள் யாருமில்லை எல்லாரும் நண்பர்கள்தான் என்றார். நாங்களெல்லாம் உங்கள் நண்பர்கள் என்றால் கரூர் சம்பவத்தின் பழியை ஏன் என் மீது போட்டீர்கள்? ஏன் நிகழ்ச்சிகள் நடத்த இவ்வளவு தடைகளை ஏற்படுத்துகிறீகள். உங்கள் ஆட்சி தவறான ஆட்சி. தமிழ்நாட்டிற்குத் தேவையில்லாத ஆட்சி.

வெற்றி வாக்குச்சவடி விஜய் வாக்குச்சாவடி

நான் சமீபத்தில் முதலமைச்சர் கூட விசில் சின்னத்திற்கு வாக்களிப்பார் என்று கற்பனையாக ஒரு கருத்தைச் சொன்னேன். அதை உறுதிப்படுத்துவது போல் ஒன்று செய்திருக்கிறார்கள். “எங்கள் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி” என்று சொல்கிறார்கள். வெற்றிச் சாவடி என்றால் என்ன அர்த்தம்? எங்கள் வாக்குச்சாவடி விஜய் வாக்குச்சாவடி என்று அர்த்தம்.

கல்லாப் பெட்டிக் கூட்டணி

ஸ்டாலின் சார் அறிவாலயம் பக்கம் நடந்து போனாலும், நிழலுக்கு ஒதுங்கினாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறார். கொள்ளையடித்த பணத்தில் கொஞ்சம் கொடுத்து கல்லாப் பெட்டி கூட்டணியைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். இந்த பழைய கூட்டணிக் கணக்கைக் கொண்டு மக்களை ஏமாற்றி ஜெயிக்க முடியாது. ஏனென்றால் இது மாபெரும் மக்கள் சக்தியான விசில் புரட்சித் தேர்தல்.” என்றார்.

TVK leader Vijay during his speech in Vellore, strongly criticized Chief Minister Stalin that he is forming an alliance by inviting even those who walk near the Arivalayam.