கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

மும்மொழிக் கொள்கை, விகடன் முடக்கம்: விஜய் நிலைப்பாடு என்ன?

"கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?"

கிழக்கு நியூஸ்

மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் வரை சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிக்கப்படாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரப் பிரதேசத்தில் நேற்று கூறினார். இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை நிதி கிடையாது என்ற மிரட்டல் விடுக்கும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார்.

இதனிடையே, தமிழ்நாட்டில் புகழ்பெற்ற வார இதழான விகடன் இதழின் இணையதளப் பக்கம் முடக்கப்பட்டது. பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தை விமர்சித்து விகடன் ப்ளஸ் இதழில் வெளியான கார்டூன் தொடர்பாக எழுந்த புகாரைத் தொடர்ந்து முடக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்விக்கு நிதி விடுவிப்பது மற்றும் விகடன் இணையதளப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது என இரண்டு விவகாரங்களுக்கும் சேர்த்து ஒரே அறிக்கையாக வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.

இதுதொடர்புடைய எக்ஸ் தளப் பக்கத்தில் விஜய் குறிப்பிட்டுள்ளதாவது:

"மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?

ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?

மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.

ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்" என்று விஜய் பதிவிட்டுள்ளார்.