நடிகர் விஜய் ஒரு நாளில் 3 மாவட்டங்களில் பிரசாரம் செய்வதாக வெளியான அறிவிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காணும் தவெக தலைவர் விஜய், தனது சுற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அதன்படி வரும் சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூரில் அவர் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முன்னதாக சென்ற வார சனிக்கிழமை திருச்சியிலும் அரியலூரிலும் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திட்டமிடப்பட்டிருந்த பெரம்பலூர் மாவட்டத்திற்கு விஜய்யால் செல்ல முடியவில்லை.
இதையடுத்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாள் ஒன்றுக்கு இரண்டு மாவட்டங்களில் மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி வரும் செப்டம்பர் 20-ல் திட்டமிடப்பட்டிருந்த மயிலாடுதுறை சுற்றுப் பயணத்தை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
திருச்சி பிரசாரத்தின் போது ரசிகர்கள் குவிந்ததால் குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைய 5 மணி நேரத்திற்கும் மேல் ஆகியது. இதனால் விஜய் இம்முடிவுக்கு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்ய காவல்துறையில் விஜய் தரப்பில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.