தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23 அன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை மே 4 காலை 8 மணிக்குத் தொடங்கி நள்ளிரவையும் கடந்து நீடித்தது. அதன்பின் தற்போது 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்து, அதிகாரபூர்வ முடிவுகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தவெக நிர்வாகிகள் அதிரடி வெற்றி
இந்தத் தேர்தலில் புதிதாகக் களமிறங்கிய விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சிக் கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அதேபோல் தியாகராய நகரில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், கோபிசெட்டிப்பாளையத்தில் கே.ஏ. செங்கோட்டையன், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, எழும்பூரில் போட்டியிட்ட ராஜ்மோகன், திருப்பரங்குன்றத்தில் சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
திமுக, அதிமுகவின் நிலவரம்
திமுக கூட்டணி 73 இடங்களில் வென்றுள்ளது. இதில் திமுக மட்டும் 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 5 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 2 இடங்களிலும், விசிக 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், தேமுதிக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மட்டும் 47, பாமக 4, பாஜக 1 அமமுக 1 என 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் அமையும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆட்சியை இழந்த திமுக
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலும் திமுக வெற்றிபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல அமைச்சர்கள் தோல்வியைத் தழுவி உள்ளனர். திமுகவின் முக்கிய வேட்பாளர்களாகக் கருதப்பட்ட 32 அமைச்சர்கள், ஒரு சபாநாயகர் ஆகியோரில் 16 பேர் தோல்வியைச் சந்தித்துள்ளனர். கொளத்தூர் தொகுதியில் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தார். ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு தோல்வியடைந்தார். அதேபோல் அமைச்சர்களாக இருந்த துரைமுருகன், மா. சுப்பிரமணியன், முத்துசாமி, தா.மே. அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், ராஜேந்திரன், டி.ஆர்.பி. ராஜா, கீதா ஜீவன், மூர்த்தி, அன்பில் மகேஷ், காந்தி, ஆவடி நாசர், மதிவேந்தன், சாமிநாதன், பெரியகருப்பன் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ. பெரியசாமி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தங்கம் தென்னரசு, ரகுபதி, சிவசங்கர், சேகர்பாபு, மெய்யநாதன், சி.வி. கணேசன், கா. ராமச்சந்திரன், சக்கரபாணி, கோவி. செழியன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இரண்டாவது முறையாக தோற்ற அதிமுக
அதிமுகவைப் பொறுத்தளவில் 169 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 98,110 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல், முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீரமணி, கே.பி. அன்பழகன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முக்கூர் சுப்பிரமணியன், சி.வி. சண்முகம், கே.சி. கருப்பண்ணன், எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர் விஜயபாஸ்கர், ஓ.எஸ். மணியன், ஆர். காமராஜ், சி. விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து இரண்டு முறை தோற்ற வரலாற்றை அதிமுக படைத்துள்ளது.
பாஜக, காங்கிரஸ், விசிக, பாமக
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்ட வன்னி அரசு 734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 85,179 வாக்குகள் பெற்று 33,063 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம் விசிகவுக்கு 2 உறுப்பினர்கள் உறுதியாகியுள்ளனர். பாமக தலைவர் அன்புமணியின் மனைவியும் தர்மபுரியில் போட்டியிட்ட பாமக வேட்பாளருமான சௌமியா அன்புமணி, 93,713 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தோல்வி
சீமானின் நாம் தமிழர் கட்சி தேர்தலை தனித்து சந்தித்தது. அக்கட்சி சார்பில் 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும் 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டனர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் களமிறங்கினார். இதில் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக காரைக்குடியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் பிரபுவிடம் 70,565 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து டெபாஸிட் இழந்தார்.
The Tamil Nadu Victory Party has emerged as the majority party in the Tamil Nadu Assembly elections, winning 108 seats.