கோப்புப்படம் 
தமிழ்நாடு

மாநாட்டில் வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்பு?: தவெக தகவல்

தவெக மாநாட்டில் 50 ஆயிரம் பேர் வரை பங்கேற்க வாய்ப்பிருப்பதாகத் தகவல்.

கிழக்கு நியூஸ்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டில் 50 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதிலிருந்து, கட்சித் தலைவர் விஜய் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மிகவும் வெளிப்படையாக எதையும் குறிப்பிடவில்லை. கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்டபோதும், மாநாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறினார். இதனிடையே தான் தவெகவின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23 அன்று நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி கோரி தவெக சார்பில் பொதுச்செயலாளர் ஆனந்த் காவல் துறையிடம் கடந்த 28 அன்று மனு அளித்தார். இதைத் தொடர்ந்து 21 கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்புடைய பதில் அறிக்கையை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் இன்று சமர்ப்பித்தார். இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் வழக்கம்போல தவெக தலைவர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று கூறி கடந்துவிட்டார்.

"தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விஜய் அறிவுறுத்தலின்படி மாநாடு நடைபெறுவதற்கு காவல் துறையிடம் அனுமதிகோரி கடிதம் அளித்திருந்தோம். இதன் அடிப்படையில் அவர்கள் 21 கேள்விகளை எங்களிடம் கேட்டிருந்தார்கள். இதற்கான உரிய பதில்களை இன்று நாங்கள் அளித்துள்ளோம்.

காவல் துறை உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டு ஓரிரு நாள்களில் பதிலளிப்பதாகக் கூறியிருக்கிறார்கள். இவர்களுடையத் தகவலுக்குப் பிறகு, மாநாட்டின் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தவெக தலைவர் வெளியிடுவார்.

21 கேள்விகளுக்கு 5 நாள்களில் பதிலளிக்குமாறு காவல் துறை தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமையான இன்று நாங்கள் பதில் கொடுத்துள்ளோம்" என்றார் ஆனந்த்.

காவல் துறையினர் கேட்ட கேள்விகளுக்கு விஜயிடம் ஆலோசனை நடத்தி பதில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மாநாட்டில் 50 ஆயிரம் பேர் வரை பங்கேற்கவிருப்பதாகவும், விஜய் தவிர்த்து வேறு கட்சித் தலைவர்கள் யாரும் மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்றும் தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே வேளையில் இந்த மாநாடு நண்பகல் தொடங்கி இரவு வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.