தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்) https://www.instagram.com/tvk_vijay/
தமிழ்நாடு

சேலத்தில் மீண்டும் பிரசாரத்தைத் தொடங்கும் விஜய்?: அனுமதி மறுத்த காவல்துறை | TVK | Vijay |

தவெக தரப்பில் கோரப்பட்ட தேதியில் சிக்கல் இருப்பதால் காவல்துறை அனுமதி வழங்க மறுத்ததாகத் தகவல்...

கிழக்கு நியூஸ்

கரூர் சம்பவத்திற்குப் பிறகு சேலத்தில் பிரசாரத்தை தொடங்க தவெகவினர் மனு அளித்துள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில் காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார். அதன்பின் பொதுக்கூட்டங்கள் வழியே மக்களைச் சந்தித்து வந்த அவர், செப்டம்பர் 13 முதல் தேர்தல் பரப்புரை சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார். அதன்படி திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.

கடந்த செப்டம்பர் 27 அன்று அவர் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் எதிர்பாராத விதமாக 41 பேர் உயிரிழந்தார்கள். அச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், விஜய் தனது பிரசாரத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

தற்போது கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த நவம்பர் 5 அன்று தவெக சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற விஜய், தனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும் கூறினார். மேலும், திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்துவிட்டதால் அடுத்ததாக அருகில் உள்ள மாவட்டமான சேலத்தில் பிரசாரத்தைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வரும் டிசம்பர் 4 அன்று சேலத்தில் பிரசாரம் செய்ய தவெக சார்பில் சேலம் காவல் ஆணையரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சேலத்தில் போஸ் மைதானம், கோட்டை மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய இடங்களை குறிப்பிட்டு தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் டிசம்பர் 4 அன்று கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுகிறது. மேலும் டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபடுவார்கள்.

இதையடுத்து டிசம்பர் 4 அன்று பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் இருப்பதால் காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விஜய் தரப்பில் வேறு ஒரு தேதியில் பிரசாரம் நடத்த அனுமதி கோரப்படும் என்றும் தெரிய வருகிறது.

Reports have emerged that the TVK officials have submitted a petition to start Vijay's campaign in Salem after the Karur incident.