தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானதால் அவரைக் கைது செய்ய இரண்டு தனிப்படைகளைக் காவல்துறை அமைத்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அக்கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, காவல்துறை கைது நடவடிக்கைக்கு முன்பாக சதீஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கு நேற்று (அக்.3) விசாரணைக்கு வந்தது. அப்போது, தவெகவினரின் அடாவடி செயல்களால் நாமக்கல்லில் ரூ. 5 லட்சம் வரை சேதம் ஏற்பட்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில், எதுவும் தெரியாது என்று மனுதாரர் எப்படிக் கூறலாம்? என்று கேட்டு, முன் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இதன் காரணமாக சதீஷ் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், சதீஷைக் கைது செய்ய இரண்டு தனிப்படைகளை அமைத்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, கரூரில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் மத்திய மாநகர தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மற்றும் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.