சிறப்பு தீவிர திருத்தம் குறித்து காணொளி வெளியிட்ட விஜய்  
தமிழ்நாடு

தவெகவினருக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்கள் மறுக்கப்படுகின்றன: விஜய் குற்றச்சாட்டு | TVK Vijay |

சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் ‘ஜென் ஸி’ வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும்...

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தத்தின் கணக்கெடுப்புப் படிவங்கள் தவெகவினருக்கு மறுக்கப்படுகின்றன என்று தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

தவெக தலைவரும் நடிகருமான விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியுள்ளதாவது:-

“இந்திய அரசியல் சாசனம் நம் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்குமே கொடுத்திருக்கும் உரிமைகளில் மிகவும்ம் முக்கியமானது வாக்குரிமை. ஆனால் இப்போது நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் நம் யாருக்குமே வாக்களிக்கும் உரிமையே இல்லை என்று சொன்னால் நம்புவீர்களா? நான் பயமுறுத்துகிறேன் என்று நினைக்காதீர்கள். ஆனால் அதுதான் நிஜம். இதற்கான முக்கிய காரணம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.

சிறப்பு தீவிர திருத்தம் எப்படி வேலை செய்கிறது என்றால், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவத்தைக் கொடுப்பார்கள். அதை நாம் நிரப்பித் தர வேண்டும். அதைத் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும். அனைத்து தகவல்களும் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்த பின்னர் வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். அந்தப் பட்டியலில் நம் பெயர் இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் வாக்களிக்க முடியும். அந்தப் புதிய பட்டியல் வரும் வரை நாம் வாக்காளர்கள் என்று உறுதி செய்ய முடியாது. ஒருவேளை அந்தப் பட்டியலில் நம் பெயர் இல்லை என்றால் அதன் பின்னர் செய்ய வேண்டிய வழிமுறைகள் தனி. வேறு ஒரு படிவம், வேறு இடத்தில் முறையிட வேண்டும். வேறு ஒரு புதிய வேலை அது.

சிறப்பு தீவிர திருத்தத்தில் இதுபோன்ற நிறைய சிரமங்கள், குழப்பங்கள் இருப்பதால்தான் மக்கள் இதில் குழம்பியிருக்கிறார்கள். இது என்ன ஆவண சரிபார்ப்பா? மறைமுகமாக பதிவு செய்யும் நடைமுறையா? இல்லை இதுவும் புதிதாக வாக்காளர் அடையாள அட்டை பதிவது மாதிரி தானா என்று குழப்பங்கள் இருக்கின்றன.

குறிப்பாக உங்கள் பகுதியில் வாக்குச்சாவடி நிலை அதிகாரி யார் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு கணக்கெடுப்புப் படிவம் கிடைக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் இருந்து வாக்குச்சாவடி நிலை அதிகாரியின் தொடர்பு எண்களை பெற்றுத் தொடர்பு கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் நிரப்பிவிட்டீர்கள் என்பதற்கான உறுதிச் சான்றிதழை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

நியாயமான சிறப்பு தீவிர திருத்தம் என்றால் என்ன நடக்கும்? இப்போது இறந்துபோனவர்களை அதிலிருந்து நீக்க வேண்டும். போலி வாக்காளர்கள் இருந்தால் அவர்களை நீக்க வேண்டும். ஆனால் ஏற்கெனவே வாக்குரிமை இருப்பவர்களுக்கு எதற்கு இந்தப் பதிவு என்ற பெயரில் இவ்வளவு குழப்பங்கள் என்றுதான் கேள்வி. இப்போது புதியதாக வரும் வாக்காளர்களையோ வாக்கு இல்லாதவர்களோ சேர்த்தால் போதாதா? இப்போது சமீபத்தில் நடந்த தேர்தல்களில் எப்படி எல்லாரும் வாக்களித்தோம்? அதில் வாக்களித்தவர்களும் இப்போது புதிதாக பதிவு செய்ய வேண்டும் என்றால் அது ஏன்? எதற்காக இந்தக் குழப்பங்கள் என்று கேள்வி கேட்கிறோம். அதனால்தான் நாங்கள் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்க்கிறோம்.

நமது தவெக தோழர்களுக்கு அந்தக் கணக்கெடுப்புப் படிவங்கள் கிடைப்பதில்லை. மறுக்கப்படுவதாகப் புகார் கூறுகிறார்கள். இதை யார் செய்கிறார்கள் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்போது இருக்கும் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக இருக்கும் சிலர் இதைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். எல்லாருக்கும் அந்தப் படிவம் கிடைக்க வேண்டும். அதில் உறுதியாக இருங்கள். அப்படி உங்களுக்கு வரவில்லை என்றால் வலைத்தளத்தில் இருந்து படிவத்தைத் தரவிறக்கி நிரப்பிவிடுங்கள். உங்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், அனைவருக்கும் செய்து கொடுங்கள்.

குறிப்பாக ஜென் ஸி வாக்காளர்கள், கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கான படிவங்களைச் சரியாக நிரப்பி, உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்துவிடுங்கள். ஏனென்றால் வரும் தேர்தலில் ஜென் ஸி வாக்காளர்கள்தான் முக்கியமான ஆற்றல். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம், அதைக் கலைக்கும் வகையில் என்னென்ன தில்லுமுல்லு வேலைகள் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வார்கள். நமக்கு எல்லாத் திசைகளிலும் பிரச்னை கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள். இதை ஒன்றும் செய்ய முடியாது. நான் அடிக்கடி சொல்வதுபோல் தமிழ்நாட்டில் திமுக, தவெக இரண்டுக்கும் இடையில்தான் போட்டியே. அதற்கான ஆயுதமாக நமக்கு இருப்பதுதான் வாக்கு, ஜனநாயகம். அதனால் என்னன்பு தவெக தோழர்களே, ஜென் ஸி படைபலமே கவனமாக இருங்கள். உறுதியாக இருங்கள்” என்று பேசியுள்ளார்.

TVK leader Vijay has accused that the survey forms for the ongoing Special Intensive Revision in Tamil Nadu are being denied to TVK members.