தமிழ்நாடு

நிர்வாகிகள் மரணத்திற்குக் கண்கலங்கிய தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சியாக உங்களைச் சந்திக்க விரும்பினேன், இப்படி ஒரு சூழலில் உங்களை சந்திக்க நேரிட்டது வருத்தமளிக்கிறது.

ராம் அப்பண்ணசாமி

உயிரிழந்த தவெக நிர்வாகிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கண்கலங்கியுள்ளார் தவெக தலைவர் விஜய்.

கடந்த அக்.27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலையில் தவெகவின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்குச் செல்லும் வழியில் சில தவெக தொண்டர்களும், நிர்வாகிகளும் உயிரிழந்தனர். மாநாட்டிற்கு அடுத்த நாள், ஒரிரு நிர்வாகிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்.

இதனை அடுத்து, தவெக மாநாடு நிறைவு பெற்றதும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டார் விஜய். இந்நிலையில், மாநாட்டிற்குச் செல்லும் வழியில் உயிரிழந்த தவெக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்களின் குடும்பத்தினரை இன்று (நவ.28) பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் சந்தித்துள்ளார் விஜய்.

அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, நிதி உதவி வழங்கியுள்ளார் விஜய். அப்போது, `மகிழ்ச்சியாக உங்களைச் சந்திக்க விரும்பினேன், இப்படி ஒரு சூழலில் உங்களை சந்திக்க நேரிட்டது வருத்தமளிக்கிறது. என்ன தேவை இருந்தாலும் உடனே தொடர்பு கொள்ளுங்கள்’ என்று கூறி அவர் கண்கலங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.