பெரம்பூரில் பிரசாரம் செய்த விஜய் 
தமிழ்நாடு

வேட்புமனு தாக்கல் செய்த விஜய்: பெரம்பூரில் முதல் பிரசாரம் | TVK Vijay | TN Elections |

பெண்கள் பாதுகாப்பு இல்லாத, சட்டம் ஒழுங்கு சரி இல்லாத, போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக உள்ள தமிழ்நாட்டை நாம் காப்பாற்றியே ஆக வேண்டும்...

கிழக்கு நியூஸ்

பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய் தனது முதல் பிரசாரத்தைத் தொடங்கினார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. இதில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் களம் காண்கிறார். இந்நிலையில், இன்று பெரம்பூர் தொகுதியில் விஜய் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பெரம்பூர் தொகுதியில் தனது முதல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

விஜயின் முதல் பிரசாரம்

அப்போது அவர் பேசியதாவது:-

“தமிழ்நாடே நமக்குப் பிடித்த இடம்தான். எங்கிருந்து வேண்டுமானாலும் நமக்குப் பிடித்த விஷயத்தைத் தொடங்கலாம். ஆனால் நம் வீட்டு வாசலில், நம்மைப் பெற்ற அம்மாவின் இடத்திலிருந்து, அவரின் ஆசியுடன் தொடங்குவது என்பதுதானே பிரகாசமாக இருக்கும். அந்த மனநிலையுடன் தான் உங்கள் விஜய், நம் பெரம்பூர் தொகுதியிலிருந்து பிரசாரத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளேன். பெண்கள் பாதுகாப்பு இல்லாத, சட்டம் ஒழுங்கு சரி இல்லாத, போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக உள்ள தமிழ்நாட்டை நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். தமிழ்நாட்டை இந்த நிலைமைக்கு தீயசக்தி திமுகதான் காரணம். ஒன்றுக்கும் உதவாத ஆட்சியை நடத்திவிட்டு, விரைவில் விடைபெறப்போகும் ஸ்டாலின் சார் தான் காரணம்.

மூதாட்டிக்குக் கூட பாதுகாப்பில்லை

கடந்த ஐந்தாண்டுகளில் ஆட்சியா நடத்தினார்கள்? சோறு தண்ணீர் இல்லாமல் கூட இருந்துவிடலாம். அடிப்படை வசதிகள் இல்லாமல் எப்படி வாழ்வது. பெண் பிள்ளைகள் இரவில் கழிவறைக்குக் கூட செல்ல முடியவில்லை. சென்று திரும்புவதற்குள் என்ன ஆகிவிடுமோ என்று பதட்டமாகவே இருக்கிறது. மூதாட்டிக்குக் கூட பாதுகாப்பில்லை. டீக்கடையில் நிம்மதியாக டீ குடிக்க முடிவதில்லை. போதையில் வந்து வெட்டிவிட்டுப் போகிறார்கள். இது நாடா? காடா? அரசு இருக்கிறதா இல்லையா? ஐந்து ஆண்டுகளாக காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் சார் அடிப்படை பாதுகாப்பைக் கூட கொடுக்க முடியவில்லை என்றால் எதற்கு உங்களுக்கு இந்த ஆட்சி, அதிகாரம்?

கொள்ளை அடிப்பதுதான் முக்கியம்

தீயசக்தி திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? நிம்மதியாக இருந்தீர்களா? ஸ்டாலின் சாருக்கு மக்கள் முக்கியமே கிடையாது. அவருக்கும் திமுக அரசுக்கும் குடும்பத்துடன் சேர்ந்து கொள்ளை அடிப்பதுதான் முக்கியம். நகராட்சி நிர்வாகத் துறை வேலைவாய்ப்பில் நடந்துள்ள ஊழல் இளைஞர்கள் மீதான அநீதி. மக்களுக்குப் பாதுகாப்பு தர இயலாத, மக்கள் மீது அக்கறையில்லாத இந்த திமுக ஆட்சியைத் தூக்கி எறிவோம்.

அதனால், கொள்ளையடித்தப் பணத்திலிருந்து அவர்கள் வாக்கிற்குப் பணம் கொடுத்தால் அதை, வாங்கிக் கொண்டு பதிலுக்கு அவர்கள் காதில் விசில் ஊதி அனுப்புங்கள். உங்கள் மகன், அண்ணன், தம்பி, பிள்ளை என நினைத்து எனக்கு வாக்களியுங்கள். எனக்கு ஒருமுறை வாக்களியுங்கள், வாய்ப்பு கொடுங்கள். ஏப்ரல் 23 அன்று மறவாமல் வாக்களியுங்கள். ஜென் ஸீ இளைஞர்களே வாக்களிக்கத் தவறிவிடாதீர்கள். தேர்தல் நாளில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்துக்கு எதிரான பொத்தானை அழுத்தத் தவறாதீர்கள். நம்பிக்கையாக இருங்கள். நல்லதே நடக்கும்” என்றார்.

TVK Leader Vijay kick started his campaign in Perambur constituency after filing nomination to contest in the same for Tamil Nadu Assembly elections 2026.