தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சனிக்கிழமை தோறும் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இன்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலை 8.45 மணிக்கு தான் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்குப் புறப்பட்டார். அங்கிருந்து கார் மூலம் நாமக்கல்லுக்குப் பயணித்தார். பாதி வழியில் காரிலிருந்து பிரசார வாகனத்துக்கு மாறி பயணத்தைத் தொடர்ந்தார்.
வழக்கம்போல், தொண்டர்கள் புடைசூழ பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நாமக்கல் கே.எஸ். திரையரங்கம் நோக்கி பயணித்தார். பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தான் விஜய், பிரசார இடத்தை வந்தடைந்து தனது உரையைத் தொடங்கினார்.
அவர் பேசியதாவது:-
”சற்று தாமதமாகிவிட்டது மன்னிக்கவும். என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் வணக்கம். தென் இந்தியாவின் போக்குவரத்து மையமாக விளங்குகிறது நாமக்கல். நாமக்கல் மாவட்டத்தின் முட்டை உலகமும் மிகவும் பிரபலம். இதை முட்டை நகரம் என்றே அழைப்பார்கள்.
தமிழ்நாட்டு மக்களின் சத்தான உணவான முட்டையைக் கொடுக்கும் ஊர் மட்டுமல்ல, உணர்ச்சியூட்டும் மண்ணும் நாமக்கல்தான். “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!” என்ற இரண்டு வரிகளைச் சொன்னால் இன்னும் நேரடியாகப் புரியும். நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் இந்த வரிகளை எழுதியது யார் தெரியுமல்லவா! இதைச் சொன்னது விஜயகாந்த் என்றாலும், நமக்கும் சேர்த்து இவ்வரிகளை எழுதியவர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகனூரில் பிறந்த நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைதான்.
தமிழ்நாட்டு மக்களுக்கு இடஒதுக்கீட்டை உரிமையோடு வழங்கியதும் இதே நாமக்கல்லின் திருச்செங்கோடு பகுதியில் இருந்தவர்தான். சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சுப்பராயன் தான் அந்த மாபெரும் மனிதர். அவரை “முதலமைச்சராகப் பதவியேற்ற முதல் தமிழர்” என்று பெருமையோடு சொன்னது மட்டுமன்றி, அவருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று வாக்குறுதி எண் 456-ல் கொடுத்தது யார்? சொன்னார்களே செய்தார்களா?
ஒரு படத்தில் வடிவேலு ஏதுமற்ற பாக்கெட்டைக் காட்டுவாரே. அதுபோல் ஒவ்வொரு வாக்குறுதியைப் படிக்கும்போதும், நமக்கு ஏதுமற்ற பாக்கெட்டையே காட்டுகிறார்கள்.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். அவை நெல் கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும் என்ற வாக்குறுதி எண் 50, கொப்பரை தேங்காயை அரசே கொள்முதல் செய்யும். அதிலிருந்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி எண் 66, நியாயவிலைக் கடைகளில் நாட்டு சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி எண் 68, அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி எண் 152 - இதையெல்லாம் சொன்னார்களே, செய்தார்களா?
நாளொன்றுக்கு 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாமக்கல் மாவட்டத்தில், முட்டை சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், பேக்டீரியா, வைராலஜி ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக இருக்கின்றன. அதை ஆண்ட கட்சிகளும் ஆளும் கட்சிகளும் கண்டு கொள்ளவே இல்லை.
திமுக எம்.எல்.ஏவுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கிட்னி திருட்டு நாடறிந்த விஷயம். அதைப் பற்றி நான் திருச்சியிலேயே பேசினேன். கிட்னி திருட்டியில் நாமக்கல்லைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதுவும் விசைத்தறியில் பணி செய்யும் ஏழைப் பெண்களைக் குறிவைத்தே கிட்னி திருட்டு நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தவெக ஆட்சி அமைந்ததும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். கிட்னி திருட்டுக்கு ஆரம்பம் கந்துவட்டிக் கொடுமையில் இருக்கிறது. விசைத்தறி பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை ஏமாற்று மாடல் திமுக அரசு மேம்படுத்தாததால், தங்கள் கிட்னியை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை.
விசைத்தறியில் பணி செய்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வழிகளை ஆழமாகச் சிந்தித்து, எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்வோம். என் சுற்றுப்பயணத்தில் மக்கள் ஒரே விஷயத்தைத் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். அடிப்படை சாலை, குடிநீர் , மருத்துவ வசதி, பெண்கள் பாதுகாப்பு போன்றவற்றையே மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள்.
இவ்வளவு கேள்வி கேட்கும் விஜய் வந்தால் என்ன செய்வார் என்று கேட்டார்கள். அதற்கு கடந்த 2 இடங்களிலும் பதில் சொன்னேன். கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், அடிப்படை சாலை வசதி, மின்சாரம், போக்குவரத்து, பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றில் எந்த சமசரமும் கிடையாது என்று சொன்னேன்.
இதைத்தானே எல்லாரும் சொன்னார்கள், அதையேதான் இவரும் சொல்கிறார். புதிதாக எதுவும் சொல்லலையே என்கிறார்கள். ஐயா! அரசியல் மேதைகளே! ஒரு மனிதனுக்கு நல்ல உணவு, கல்வி, குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து, சாலை வசதி, பாதுகாப்பான வாழ்க்கை ஆகியவைதானே அடிப்படை தேவை. அதைச் சரியாகச் செய்வோம் என்று சொல்வது தானே சரி. அதனால்தான் எது நடைமுறைக்குச் சாத்தியமோ, எது உண்மையோ அதைமட்டும்தான் சொல்வோம், அதை மட்டும்தான் செய்வோம் என்று சொல்கிறோம்.
திமுக போல் பொய்யான வாக்குறுதிகளை எப்போதும் கொடுக்க மாட்டோம். புதிதாகச் சொல்லுங்கள் என்றால் எதைப் புதிதாகச் சொல்வது? செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும், காற்றில் கல் வீடு கட்டப்படும், அமெரிக்காவுக்கு ஒற்றையடிப் பாதை போடப்படும், வீட்டுக்குள்ளேயே விமானம் ஓட்டப்படும் என்று நம் முதல்வர் போல அடித்து விடுவோமா?
இந்த பாசிச பாஜகவுடன் நாங்கள் எப்போதும் ஒத்துப்போக மாட்டோம். திமுக போல் பாஜகவுடன் மறைமுக உறவுக் காரர்களாக இருக்க மாட்டோம். மூச்சுக்கு முந்நூறு முறை அம்மா அம்மா என்று சொல்லிக்கொண்டு, ஜெயலலிதா சொன்னவற்றை முழுவதுமாக மறந்துவிட்டு, பொருந்தாக் கூட்டணியை அமைத்துக் கொண்டு, தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று சொல்கிறார்களே, அவர்களைப் போலவும் நாம் இருக்க மாட்டோம்.
பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறது? நீட்டை ஒழித்தார்களா? கல்விக்குத் தேவையான நிதியை முழுதாகக் கொடுத்தார்களா? தமிழ்நாட்டிற்கு வேண்டியதை தான் கொடுத்துவிட்டார்களா? பிறகு எதற்காக இந்தச் சந்தர்ப்பவாதக் கூட்டணி? இதை நான் கேட்கவில்லை. எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கிறார்கள். சரி, அவர்கள் கூட்டு, பொறியல், அப்பளம் என்று எதையாவது கிண்டிக் கொண்டிருக்கட்டும். நமக்கு எதற்கு?
மக்களே! இன்னொரு முக்கியமான விஷயம். அதிமுகவும் பாஜகவும் நேரடி உறவுக்காரர்கள். இந்தக் கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதே நேரத்தில் திமுக குடும்பம் பாஜகவுடன் மறைமுக உறவுக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். வரும் தேர்தலில் நீங்கள் திமுகவுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு வாக்களித்ததுபோல் ஆகிவிடும்.
மீண்டும் சொல்கிறேன். 2026-ல் ஒன்று தவெக, இன்னொன்று திமுக.
ஒன்று - மாபெரும் மக்கள் சக்தி கொண்டு, எளியோரின் குரலாய்க் களத்தில் இருக்கும் தவெக, இன்னொன்று - கொள்கை என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, கொள்ளை அடிக்கும் திமுக. இந்த இரு கட்சிகளுக்கு நடுவில்தான் போட்டி.
இப்படி ஒரு மோசமான ஆட்சியைக் கொடுக்கும் திமுக ஆட்சிக்கு மீண்டும் வர வேண்டுமா? உண்மையும் மனசாட்சியும் கொண்ட மக்கள் ஆட்சியாக தவெக அட்சி அமைக்க வேண்டுமா?
நண்பா, நண்பி, தோழா, தோழி! என் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? என்னை இவ்வளவு நம்புகிறீர்களா? சரி! பார்த்துவிடலாம். நானும் 2-3 வாரங்களுக்கு முன்பு என்னவோ ஏதோ என்று நினைத்தேன், பார்த்துவிடலாம்! உறுதியாக இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.”
இவ்வாறு பேசினார்.
Vijay | TVK Vijay | Vijay Namakkal | TVK Vijay Namakkal |