தவெக யாருடனும் கூட்டணிப் பேச்சை நடத்தவில்லை என்று அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை இறுதி செய்வது, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.
தில்லியில் விஜய்
இதற்கிடையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தில்லி சென்றார். ஏற்கெனவே இரு முறை சிபிஐ விசாரணைக்கு ஆஜரான விஜய், தொடர்ந்து மூன்றாவது முறையாக நேற்று (மார்ச் 15) அன்று ஆஜரானார். அவரிடம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தையா?
சிபிஐ விசாரணைக்காக ஒரு நாள் முன்னரே விஜய் தில்லிக்குச் சென்ற நிலையில், அவர் பாஜக தலைவர்களைச் சந்தித்ததாகவும், அவர் விரைவில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகின.
தவெக மறுப்பு
இந்நிலையில், அதனை மறுத்து தவெகவின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
வதந்திகளை நம்ப வேண்டாம். சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லாது சசிகலா, மருத்துவர் ராமதாஸ் ஆகியோரை தமிழக வெற்றிக் கழகத்துடன் தொடர்புபடுத்திக் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வதந்திகளைப் பகிர வேண்டாம்
இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன. பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.
TVK Joint General Secretary CTR Nirmal Kumar has stated that the party has not held alliance talks with anyone, especially BJP/AIADMK.