புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய என். ஆனந்த் 
தமிழ்நாடு

புதுச்சேரியிலும் தமிழ்நாட்டிலும் தவெக ஆட்சி அமைக்கும்: என். ஆனந்த் சூளுரை | TVK |

உச்சத்தில் இருக்கும் போதே மக்களுக்கு தொண்டு செய்வேன் என்று கூறிய தலைவர் விஜய்...

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் தவெக ஆட்சி அமைக்கப் போவது உறுதி என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி மூலம் தமிழ்நாட்டின் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஜய், பிரசாரங்களைத் தொடங்கியுள்ளார். முன்னதாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டங்களைக் கடந்த செப்டம்பர் 13 முதல் தேர்தல் பரப்புரை சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார். அதன்படி திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.

கடந்த செப்டம்பர் 27 அன்று அவர் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் எதிர்பாராத விதமாக 41 பேர் உயிரிழந்தார்கள். அச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், விஜய் தனது பிரசாரத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். அதன்பின் கடந்த நவம்பர் 23 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரத்தில் ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் உள்ளரங்கு நிகழ்ச்சியாகப் பிரசார கூட்டம் நடைபெற்றது. அதில், 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று புதுச்சேரியில் உப்பளம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டு, கியூஆர் கோட் வழங்கப்பட்டது. ஆனால், 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர்.

இதற்கிடையில் பொதுக்கூட்டம் தொடங்கியதும் பிரசார வாகனத்தின் மீது ஏறி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

“2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக தலைவர் விஜய் நிச்சயமாக முதல்வராக வருவார். புதுச்சேரியிலும், தவெக ஆட்சி அமையும். புதுவை காவல்துறைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தவெக பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை 31 நிபந்தனைகள் விதித்த‌து. எத்தனை நிபந்தனைகள் விதித்தாலும் விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும். இன்று வேலை நாள், இருந்தாலும் விஜயை காண அனைவரும் வந்திருக்கிறார்கள். 72 நாட்களுக்கு பிறகு பொதுக்கூட்டத்துக்கு விஜய் வந்திருக்கிறார். தமிழகத்தில் நம்மை எங்கும் விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். விஜய் கூறியதைப் போல காற்றை ஒன்றும் செய்ய முடியாது. அதுபோல, விஜயை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. நான் உச்சத்தில் இருக்கும் போதே மக்களுக்கு தொண்டு செய்வேன் என கூறிய ஒரே தலைவர் விஜய் தான். புதுச்சேரி மக்களும், தமிழக மக்களும் விஜய் மீது அதிக பாசத்தை காட்டுகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் மூன்று, நான்கு மாதங்கள் தான் உள்ளன. 2026-ல் புதுச்சேரியில் தவெக ஆட்சி அமைய உழைப்போம்” என்றார்.

TVK's general secretary N. Anand said that it is certain that the TVK will form a government in Tamil Nadu and Puducherry.