படம்: https://x.com/airnewsalerts
தமிழ்நாடு

அஜித்குமார் குடும்பத்தினருக்கு விஜய் நேரில் ஆறுதல்!

தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் உடன் இருந்தார்.

கிழக்கு நியூஸ்

திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கில் கொல்லப்பட்ட அஜித்குமார் குடும்பத்தினரிடம் தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல் கூறினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த 28.06.25 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவல் துறையினரின் தாக்குதலால் உயிரிழந்தார். இதுதொடர்பாக 6 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனிடையே, அஜித்குமார் வீட்டுக்குச் சென்றிருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் மூலம் அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரரிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகப் பேசினார்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை அஜித்குமார் இல்லத்துக்குச் சென்ற அமைச்சர் பெரியகருப்பன், அஜித்குமாரின் சகோதரருக்கு ஆவின் நிறுவனத்தில் ரூ. 30 ஆயிரம் ஊதியத்துக்கான அரசுப் பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும், இலவச வீட்டு மனைப் பட்டாவும் வழங்கப்பட்டது. அமைச்சர் பெரியகருப்பனுடன் சிவகங்கை ஆட்சியர் பொற்கொடியும் சென்றிருந்தார்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அஜித்குமார் இல்லத்துக்கு நேரில் சென்று அவருடைய குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இவர்களுடைய வரிசையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று மாலை அஜித்குமார் இல்லத்துக்குச் சென்று அவருடைய குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ரூ. 2 லட்சம் நிதியுதவியும் விஜய் அளித்தார். அஜித்குமார் வீட்டுக்குச் சென்றபோது, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் உடன் இருந்தார்.

"மிகவும் வருத்தமாக உள்ளது. தாங்கிக் கொள்ள முடியாத ஓர் இழப்பு தான். உங்களுக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாது. அந்தளவுக்கு வேதனையாக விஷயம் தான். மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள். நடக்கக்கூடாதது நடந்துவிட்டது" என்று விஜய் கூறியதாக அஜித்குமாரின் தாயார் பிறகு பேட்டியளித்தார்.

முன்னதாக, அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும் உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தவெக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்தது. இந்த ஆர்ப்பாட்டம் ஜூலை 6-ம் தேதிக்கு மாற்றப்பட்டு இடமும் மாற்றப்பட்டது.