தமிழ்நாடு

தவெக நிர்வாகிகள் விபத்தில் உயிரிழப்பு: விஜய் இரங்கல் தெரிவிக்காதது ஏன் என உறவினர்கள் விமர்சனம்

"தலைமைக் கழகத்திலிருந்து அலைபேசி அழைப்பு, அறிக்கை என எதுவும் வரவில்லை."

கிழக்கு நியூஸ்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த கட்சி நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் என். ஆனந்த் அஞ்சலி செலுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலுள்ள வி. சாலையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் விழுப்புரம் நோக்கி படையெடுக்கத் தொடங்கினார்கள்.

மாநாட்டில் பங்கேற்கச் சென்றபோது, திருச்சியைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் கலை ஆகியோர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்கள். இந்த உயிரிழப்பில் மிகுந்த வேதனையடைந்த உறவினர்கள் மாநாட்டு மேடையில் விஜய் இவர்களுக்கு ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என விமர்சனம் வைத்தார்கள். தலைமைக் கழகத்திலிருந்து அலைபேசி அழைப்பு, அறிக்கை என எதுவும் வரவில்லை என்றும் விமர்சித்தார்கள். அதேவேளையில் தாங்கள் இழப்பீடு கோரவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இதனிடையே, கட்சிப் பொதுச்செயலாளர் என். ஆனந்த் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நிர்வாகிகள் இருவருடைய மறைவு கட்சிக்கு இழப்பு என ஆனந்த் கூறினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த என். ஆனந்த் கூறியதாவது:

"நேரில் சென்று ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்குமாறு விஜய் கூறினார். அதன்படி இரங்கலைத் தெரிவித்தோம். எங்களுடையக் கட்சிக்கு இந்தத் தொண்டர்கள் பெரிய இழப்பு. அவர்களுடையக் குடும்பத்தைத் தமிழக வெற்றிக் கழகம் பார்த்துக் கொள்ளும்" என்றார் அவர்.