தமிழ்நாடு

அண்ணாமலையிடம் இதுதான் பேசினேன்...: டிடிவி தினகரன் | TTV Dhinakaran |

அதிமுக என்ற கட்சியே இப்போது இல்லை! எடப்பாடி திராவிட முன்னேற்றக் கழகம்தான் இருக்கிறது என்றும் பேச்சு...

கிழக்கு நியூஸ்

அண்மையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனைச் சந்தித்தார். அதுகுறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

”எனக்குத் தெரியும் எங்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி எப்படி என்னைச் சந்திக்க தைரியமாக வருவார் என்று. அவருக்கு தயக்கம் இருக்கும். அவர் என்னுடன் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை.

சில நல்ல உள்ளங்கள், நலம் விரும்பிகள், தில்லியைச் சேர்ந்தவர்கள், அம்மாவின் கட்சிகள் எல்லாம் ஒரணியில் வர வேண்டும், அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் திமுகவுக்கு எதிராக ஒரு குடையில் திரண்டால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று சொன்னபோது, அது நடக்கப்போவது இல்லை என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். ஆனால், எனக்குத் தெரிந்தவர்கள், நான் மதிக்கக் கூடியவர்கள், வயதில் பெரியவர்கள், அனுபவம் மிக்கவர்கள் சில கருத்துகளைச் சொல்லும்போது, அவர்கள் மீது உள்ள மரியாதையில், நீங்கள் முயற்சி செய்யுங்கள் என்று சொன்னேன்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால், நான் அந்தக் கூட்டணியில் தொடர்வதற்கு வாய்ப்பே இல்லை என்பதை எழுத்து மூலமாகவும் கொடுத்திருக்கிறேன். நண்பர் அண்ணாமலை என்னைச் சந்தித்து என் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொன்னார். நான் கூட்டணியில் இருந்து வெளியேறிய காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அந்தக் காரணத்தை மீறி நான் மீண்டும் இணைய முடியாது.

நண்பர் அண்ணாமலை வந்தபோது, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னேன். அவர் எனக்கு நல்ல நண்பர். அரசியலைத் தாண்டி நாங்கள் நண்பர்கள். அவர் என்னைச் சந்திக்க வந்து, இதைக் கேட்க, இதுதான் கேட்பார் என்று எனக்கும் தெரியும். அதனால், அதை நாங்கள் பேசிவிட்டோம். சில தலைவர்களை என்னைச் சந்திக்க வைத்து, என்னைச் சமரசம் செய்யலாம் என்று சிலர் முயற்சி செய்தார்கள். அவர்கள் முயற்சியில் நான் தவறாகச் சொல்லவில்லை. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை. ஆனால், துரோகியை என்றைக்கும் நண்பராக ஏற்றுக்கொள்ள முடியாது.

எடப்பாடி பழனிசாமி நன்றி இல்லாதவராக இருக்கிறார். ஆட்சியைக் காப்பாற்றித் தந்த எங்களுக்கு, அவர் துரோகம் செய்துவிட்டார். எங்கள் துணைப் பொதுச் செயலாளரை கட்சியில் இருந்து நீக்குவதன் மூலம், எங்கள் கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தியிருக்கிறார். பொதுச் செயலாளருக்கு களங்கம் ஏற்படுத்தியிருக்கிறார். அதனால், நாங்கள் எல்லாம் ஆளுநரிடம் மனு கொடுத்தோம். சசிகலா யாரும் துரோகி இல்லை என்று பெருந்தண்மையோடு சொல்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு செய்த அப்பட்டமான துரோகத்தை எப்படிச் சொல்ல முடியும்?

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது நான்கரை ஆண்டுகள், எவ்வளவு அடக்குமுறைகள், தேர்தல் நேரத்தில் எவ்வளவு அடக்குமுறைகள், எவ்வளவு கைதுகள், எந்தெந்த மாவட்டங்களில், முன்னாள் அமைச்சர்களாக இருந்தவர்கள், எங்கள் நிர்வாகிகள் மீது வழக்குகள், அதில் எல்லாம் கைது செய்ய வைத்திருக்கிறார்கள். இப்போது கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த குறுகிய காலத்தில் அமமுகவினரைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்க முற்பட்டார்கள். எங்களை அழிக்க நினைப்பவர்களை நம்பி எப்படி அவர்களுடன் கூட்டணிக்கு போக முடியும்?

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது தனிப்பட்ட முறையில் எந்த மனஸ்தாபமும் இல்லை. இப்போது அண்ணா திமுக என்று கட்சி இல்லை. அது எடப்பாடி திராவிட முன்னேற்றக் கழகம்தான் இருக்கிறது”

இவ்வாறு பேசினார்.