தமிழ்நாடு

விஜய் வந்தால் எடப்பாடி பழனிசாமி பாஜகவைக் கழற்றி விட்டுவிடுவார்: டிடிவி தினகரன் | TTV Dhinakaran |

எடப்பாடி பழனிசாமியால் பாஜக கூட்டணி பலவீனமடைந்து வருகிறது என்றும் பேச்சு...

கிழக்கு நியூஸ்

அதிமுகவுடன் விஜய் கூட்டணிக்கு வந்துவிட்டால் எடப்பாடி பழனிசாமி பாஜகவைக் கழற்றி விட்டுவிடுவார் என்று டிடிவி தினகரன் பேசினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில் கடந்த அக்டோபர் 8 அன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது, கூட்டத்தில் தவெக கொடியை ஒருவர் காட்டினார். அதைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி “அதிமுக - தவெக கூட்டணிக்குப் பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள் தொண்டர்கள்” என்று பேசினார். இதையடுத்து அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விஜயின் தலைமையை ஏற்க எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார் என்று கூறினார். அவர் பேசியதாவது:-

“எந்தக் கொள்கையை நோக்கி எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை எல்லா இடங்களிலும் அவர் காட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார். துரோகம் தமிழ்நாடு முழுவதும் சென்று தலை விரித்துப் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் மற்ற கட்சிகளின் கொடிகளைத் தன் கட்சி பிரசாரக் கூட்டங்களில் பயன்படுத்துகிறார். அதையும் சரியாகச் செய்யத் தெரியவில்லை. அதிமுக சட்டை அணிந்த ஒருவரே தவெக கொடியைப் பிடித்து ஆட்டுகிறார். அரசியலில் தரம்தாழ்ந்த செயல்களை எடப்பாடி கம்பெனி செய்து கொண்டிருக்கிறது.

கரூர் துயரச் சம்பவம் நடந்திருக்கும் இந்த வேளையில் வீடு எரியும்போது சுருட்டுக்கு நெருப்பு கேட்பது போலவும், ஆடு நனைகிறதே என்று ஓநாய் கண்ணீர் வடிப்பது போலவும் கூட்டணி கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி செயல்படுவது மற்ற அரசியல் கட்சிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

விஜய் தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று எப்போதோ கூறிவிட்டார்கள். அவரைத் தலைமையாக ஏற்க எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார். அந்த அளவுக்கு எடப்பாடியின் அதிமுக பலவீனமாக இருக்கிறது. கூட்டணிக்கு அழைப்பு விடுத்துப் பேச்சுவார்த்தை நடத்திருக்கலாம். தன் கட்சிக்காரர்களை வைத்தே எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்சிக் கொடியை ஆட்ட வைப்பது ஊடகங்களில் வெட்ட வெளிச்சமாக வந்துவிட்டது.

பாஜகவுக்கு முக்கியமான 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது கூட்டணியில் இருந்து வெளியேறிய எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு எதிராக என்னெவெல்லாம் பேசினார். இப்போது மீண்டும் கூட்டணியில் இணைந்துகொண்டு தங்கள் கட்சியைக் காப்பாற்றியதே தில்லி பாஜகதான் என்று கூறுகிறார். எடப்பாடி பழனிசாமிக்குத் துரோகத்தைத் தவிர எதுவும் தெரியாது. விஜய் கூட்டணிக்கு வந்துவிட்டால் அவர் பாஜகவையும் கழற்றி விட்டுவிடுவார்.

எடப்பாடி பழனிசாமி அந்தக் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும்போது அந்தக் கூட்டணி பலவீனமடைந்து வருகிறது. இதனை பாஜகவும் உணர வேண்டும். தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி இடம்பெற்றிருக்கும் கூட்டணி 15%-க்கும் குறைவாகத்தான் பெறும்” என்றார்.