அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. இதில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக 27 தொகுதிகள், பாமக 18, அமமுக 11, தமாகா 5, ஐஜேகே 2, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் 1 எனத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.
வேட்பாளர் பட்டியல்கள் வெளியீடு
கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற பட்டியலையும் கடந்த மார்ச் 25 அன்று அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மேலும் அதிமுக சார்பில் 2 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதி உட்பட 23 தொகுதிகளில் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 21 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்துள்ள 127 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை நேற்று (மார்ச் 27) அதிமுக வெளியிட்டது. அதேபோல் தமாகா, ஐஜேகே, பாமக உள்ளிட்ட கட்சிகளும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டன.
அமமுக வேட்பாளர் பட்டியல்
இதைத் தொடர்ந்து இன்று சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தன் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 11 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டார். அதன்படி,
நாங்குநேரி - இசக்கிமுத்து
ஒட்டப்பிடாரம் (தனி) - சுந்தர்ராஜன்
சைதாப்பேட்டை - செந்தமிழன்
மடத்துக்குளம் - சண்முகவேலு
பூவிருந்தவல்லி (தனி) - ஏழுமலை
திருச்சி மேற்கு - தொட்டியம் ராஜசேகரன்
பெரியகுளம் (தனி) - கதிர்காமு
மன்னார்குடி - எஸ்.காமராஜ்
திருவையாறு - கார்த்திகேயன்
திருப்பத்தூர் - ஞானசேகர்
காரைக்குடி - தேர்போகி பாண்டி
ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில், மடத்துக்குளம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் சி. சண்முகவேலு, 2001-ல் மடத்துக்குளம் தொகுதியிலிருந்தும் 2006-ல் உடுமலைப்பேட்டை தொகுதியிலிருந்தும் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற தொழில்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டு, அமைச்சரவை மறுசீரமைப்பின்போது 5 மாத காலத்தில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்.
முதலமைச்சருக்கு தோல்வி பயம்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும். அதைச் செய்ய தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைய வேண்டும். அமமுக குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடவுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் திமுகவுக்கு எதிராக அமைதிப் புரட்சி தான் செய்வார்கள். சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. பாஜகவை காட்டியே திமுக பயமுறுத்துகிறது. ஒரு குடும்பத்தின் பிடியில் ஆட்சி நடக்கிறது. இதை மாற்ற ஜெயலலிதாவின் ஆட்சி வரவேண்டும். முதலமைச்சர் பயத்தில் இருப்பதால்தான் அனைவரையும் கூட்டணிக்குள் சேர்த்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அது தோற்கப்போகும் கூட்டணிதான்” என்றார். அத்துடன் 30 பக்கங்கள் கொண்ட அமமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.
TTV Dhinakaran released The list of candidates contesting the Tamil Nadu Legislative Assembly elections on behalf of the Amma Makkal Munnetra Kazhagam.