டிடிஎஃப் வாசன் 
தமிழ்நாடு

விதிமுறைகளை மீறி கார் ஓட்டிய வழக்கு: டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்

யோகேஷ் குமார்

விதிமுறைகளை மீறி கார் ஓட்டியதாக யூடியூபர் டிடிஎஃப் வாசனை மதுரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி அதை யூடியூபில் பதிவிட்டு அதன் மூலம் பல ரசிகர்களைக் கொண்டவர் டிடிஎஃப் வாசன்.

ஏற்கெனவே, ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த காரணத்தால் டிடிஎஃப் வாசனுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்ட 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் சென்ற வாசன், மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே செல்போனில் பேசியபடியே காரை இயக்கியதாகவும், அதனை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மணிபாரதி என்பவர் அளித்த புகாரின் பேரில், மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாசன், பொதுமக்களுக்கு இடையூறு செய்யவில்லை என்றும், இது தொடர்பாக யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், டிடிஎஃப் வாசன் உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் உறுதிமொழி பத்திரம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.