பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த அவதூறு கருத்திற்கு நடிகை த்ரிஷா பதிலளித்துள்ளார்.
சென்னையில் கடந்த பிப்ரவரி 14 அன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தவெக தலைவர் விஜய் சேலத்தில் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், “விஜய் முதலில் த்ரிஷாவை விட்டு வெளியே வர வேண்டும்” என்று தெரிவித்தார்.
யாருடைய மனதும் புண்படக் கூடாது
நயினார் நாகேந்திரன் நடிகையின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு விமர்சனம் செய்தது சர்ச்சைக்குள்ளானது. அவரது பேச்சுக்குப் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கிடையில், நயினார் நாகேந்திரன் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், “என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் யாருடைய மனதும் புண்படக் கூடாது என்று நினைப்பவன் நான்” என்று கூறியிருந்தார்.
நடிகை த்ரிஷா கருத்து
இந்நிலையில் நடிகை த்ரிஷா இதுகுறித்து எதிர்வினை ஆற்றியுள்ளார். தனது சமூக ஊடகப் பக்கத்தில் தனது வழக்கறிஞரின் அறிக்கையை வெளியிட்டுள்ள த்ரிஷா, “அவமரியாதை என்பது அம்பலப்படுத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். த்ரிஷாவின் வழக்கறிஞர் நித்யேஷ் நட்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“எனது கட்சிக்காரரும், புகழ்பெற்ற இந்திய நடிகையுமான த்ரிஷா கிருஷ்ணனின் அறிவுறுத்தலின் பேரில், பின்வருவனவற்றைப் பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். இது, த்ரிஷாவைப் பற்றி ஊடகங்களில் பரவி வரும் அருவருப்பான கருத்து தொடர்பான அறிக்கை இது.
அரசியலில் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவரால் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்து தெரிவிக்கப்படும் என்று த்ரிஷா ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல, மேலும் கடந்த காலங்களில் அவர் கடைபிடித்தது போலவே அரசியலில் நடுநிலையான நிலைப்பாட்டைத் தொடர்வார் என்பதையும் இதன் மூலம் தெளிவுப்படுத்துகிறார்.
எனது கட்சிக்காரரான த்ரிஷா தனது கலை மூலம் மட்டுமே அறியப்பட விரும்புகிறாரே அன்றி எந்தவொரு அரசியல் நிலைப்பாட்டுடனும் தொடர்பு படுத்தப்படுவதை விரும்பவில்லை. முக்கியமாக தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் பொது விமர்சனம் அல்லது விவாதத்திற்கு உட்படுத்தக்கூடாது என்ற பொதுவான கருத்தை உயர் பதவிகளில் இருப்பவர்கள் பராமரிக்க வேண்டும் என்பதையும் இதன்மூலம் வலியுறுத்துகிறார். இந்த விவகாரத்தில் இனி எனது கட்சிக்காரரான த்ரிஷாவின் பெயர் இணைக்கப்பட வேண்டாம் என்பது இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Actress Trisha has responded to the defamatory comment made by BJP state president Nainar Nagenthran