திருச்சியில் நடிகர் விஜய் பிரசாரம் செய்யும்போது வாகனத்தில் நின்றபடி வரக்கூடாது என்பது உள்ளிட்ட 26 நிபந்தனைகளைக் காவல் துறை விதித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். முதலாவதாக தனது பிரசாரத்தை வரும் செப்டம்பர் 13 அன்று திருச்சியில் தொடங்குகிறார். இதற்காக சத்திரம் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் செய்ய விஜய் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்ய காவல்துறையின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய்யின் பிரசாரத்திற்கு 26 நிபந்தனைகளைக் காவல்துறை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் பேசும் இடங்களைத் தவிர மற இடங்களில் விஜய் பிரசார வாகனத்தை விட்டு வெளியே வரக் கூடாது. பிரசார வாகனத்தின் மீது நின்றுகொண்டு, சாலையில் வலம் வரக்கூடாது.
விஜய்யின் வாகனத்திற்குப் பின்னால் 5,6 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும். பிரசார வாகனத்தில் விஜய் அமர்ந்தபடிதான் வர வேண்டும். நின்றுகொண்டு கையை அசைத்தபடி வரக்கூடாது. அனுமதி அளிக்கப்படும் இடங்களில் விஜய் அரை மணி நேரம் மட்டுமே பிரச்சாரம் செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது. பெரிய குச்சி, கம்பங்களில் இணைக்கப்பட்ட கொடிகளைக் கொண்டு வரக்கூடாது. செப்டம்பர் அன்றூ காலை 10:30 முதல் 11 மணி வரை மட்டுமே பேச வேண்டும். கூட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகளை அழைத்து வரக்கூடாது. மக்களுக்கும் வணிகர்களுக்கும் எந்தவித இடையூறும் ஏற்கூடாது என்பது உட்பட 26 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து காவல்துறையினர் விதித்த கட்டுப்பாடுகளை தவெக நிர்வாகிகள் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். அவற்றை ஒப்புக்கொண்டு பிரசாரம் செய்ய அனுமதிக்குமாறு தவெகாவினர் எழுத்துப் பூர்வமாக கோரிக்கை வைத்த நிலையில், திருச்சி காவல் ஆணையர் அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
TVK | Vijay | TN Politics | Trichy | TVK Campaign |