கோப்புப்படம் படம்: https://twitter.com/ThiruArasarINC
தமிழ்நாடு

தேர்தலில் போட்டியிட எதிராக இருந்தவர்களுக்கு நன்றி: திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர்

திருச்சி மக்களவைத் தொகுதிக்காக 5 ஆண்டுகள் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டு திருநாவுக்கரசர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிட வேண்டி விரும்பியவர்களுக்கும், போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போக முயன்றவர்களுக்கும் நன்றி என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருச்சியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர், 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதற்குப் பதில் மயிலாடுதுறை காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது.

திருச்சி எம்.பி.யாக இருந்தபோதிலும் தொகுதியில் பெரிதளவில் தலைகாட்டாமல் இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. இதனால், காங்கிரஸ் கட்சியிலேயே இவருக்கு எதிராகப் போர்க்கொடிகள் உயர்த்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், திருச்சி மக்களவைத் தொகுதிக்காக 5 ஆண்டுகள் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டு திருநாவுக்கரசர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையின் இறுதியில், "இந்தத் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாது என இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார். திருநாவுக்கரசரின் இந்த அறிக்கையில் காங்கிரஸ் கட்சிக்குள் பேசுபொருளாகியுள்ளது.