உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலீடுகளாக மாறும் என தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மண்டலக் கூட்டம் கிருஷ்ணகிரியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கலந்துகொண்டார்.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலீடுகளாக மாறும் எனத் தெரிவித்தார்.
"உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 70% ஒப்பந்தங்கள் முதலீடுகளாக மாறும் என நம்புகிறோம். குறிப்பாக முதல்வரின் அமெரிக்கப் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 100% முதலீடுகளாக மாறும்.
முதல்வரின் அமெரிக்கப் பயணத்தின்போது கூகுள் நிறுவனத்துடன் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு குறித்து 20 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி கிடைக்கவுள்ளது. இதற்கான பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. ஃபோர்டு நிறுவனம் மீண்டும் சென்னை திரும்புவது குறித்த தகவல்களை அந்த நிறுவனம் அடுத்த மாதம் வெளியிடும்" என்றார் அமைச்சர் டிஆர்பி ராஜா.