அனைத்துப் போக்குவரத்து தொழிற்சங்கம், தொழிலாளர் நல ஆணையம் மற்றும் தமிழக அரசு இடையிலான முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என அறிவித்துள்ளன.
வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச செலவை அரசு கொடுக்க வேண்டும், ஓய்வூதியர்களின் பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்தங்கள் வரும்போது ஓய்வூதியர்களுக்கு ஊதிய விகித ஒப்பந்தப் பலனைக் கொடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில், விண்ணப்பித்து காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும், 2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்துள்ளவர்களுக்குப் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்கிற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துப் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் ஜனவரி 9 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, போக்குவரத்து தொழிற்சங்களுடன் தமிழக அரசு மூன்று முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. மூன்று முறையும் சமரசம் எட்டப்படவில்லை. கடந்த 5-ம் தேதி நடைபெற்ற பேச்சுவாரத்தையில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் கலந்துகொண்டார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், நிதித் துறையுடன் கலந்தாலோசித்த பிறகு அறிவிக்க முடியும் என்பதால் பேச்சுவார்த்தை ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று அனைத்துப் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையிலும் சமரசம் எட்டப்படவில்லை.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியூ பொதுச்செயலாளர் சௌந்தரராஜன் கூறியதாவது:
"போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி வேலைநிறுத்த நோட்டீஸை கொடுத்தார்கள். இதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் எந்தக் கோரிக்கையையும் தற்போது ஏற்க முடியாது, பொங்கலுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று பதில் சொன்னார்கள். இந்தப் பதில் முழுக்கமுழுக்க நியாயமற்ற, திருப்தியற்ற பதில். அரசிடமிருந்து இந்தப் பதிலை யாராலும் ஏற்க முடியாது.
6 கோரிக்கைகளில் எதன் மீதும் தற்போது பதில் சொல்ல முடியாது என்றார்கள். இதன்பிறகு அமைச்சர் வந்தார். அவரும் இதையேதான் சொன்னார். சமரசப் பேச்சுவார்த்தையில் எதையும் அவர்கள் ஏற்கவில்லை.
போக்குவரத்து ஊழியர்களைப் பொறுத்தவரை, இந்த அரசு இரண்டாம் நிலை குடிமக்களாகப் பார்க்கிறது என்பதை நாங்கள் மிகுந்த வருத்தத்தோடு சுட்டிக்காட்டுகிறோம். எந்தத் துறைக்கு இழைக்கப்படாத அநீதியைப் போக்குவரத்துத் துறைக்கு இழைக்கிறார்கள்.
எங்களுடைய ஊதிய உயர்வைப் பிறகு பேசிக்கொள்ளலாம். மற்ற கோரிக்கைகளைப் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சொல்லியும்கூட, ஒரு கோரிக்கையைக்கூட அவர்கள் ஏற்கவில்லை. ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள அகவிலைப்படியை விடுவிக்குமாறும் கூறினோம். அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறு கூற அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?. பொங்கல் கொண்டாட வேண்டும் என்பதற்காக எங்களது கோரிக்கையை சுருக்கிவிட்டோம். வெறும் ரூ. 70 கோடி மூலம் இந்தப் பிரச்னையை மாதந்தோறும் சரி செய்வதற்கான வழிமுறைகளையும் காட்டிவிட்டோம். இத்தனைக்குப் பிறகும் எதுவும் செய்ய முடியாது என்கிற முடிவை அரசு எடுத்தால், அவர்கள் பெரிய தவறை இழைக்கிறார்கள் என்பதுதான் பொருள். நாங்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற முடியாது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார் அவர்.