தமிழக அரசிடம் வைத்த 6 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்துப் போக்குவரத்துத் தொழிற்சங்க கூட்டமைப்புகள் அறிவித்துள்ளன.
ஓய்வூதியர்களின் பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்புகள் ஏற்கெனவே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து அறிவித்திருந்தார்கள். இதுதொடர்பாக அரசு தரப்பில் கடந்த மாதம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படாததையடுத்து, இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சென்னை தேனாம்பேட்டையில் இன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையிலும் சமரசம் எட்டப்படாததால் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்புகளும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியூ பொதுச்செயலாளர் சௌந்தரராஜன் கூறியதாவது:
இன்று போக்குவரத்துக் கழகங்களில் நாங்கள் கொடுத்திருந்த நோட்டீஸை ஒட்டி இரண்டாவது சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் உரிய அதிகாரிகள் வர வேண்டும் என முந்தையப் பேச்சுவார்த்தைகளில் கூறியிருந்தோம். இதன்படி இரு நிர்வாக இயக்குநர்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள். இவர்களுடன் வேறு சில அதிகாரிகளும் வந்திருந்தார்கள். பேச்சுவார்த்தையில் நாங்கள் ஏற்கெனவே கொடுத்திருக்கிற 6 கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.
வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச செலவை அரசு கொடுக்க வேண்டும்.
ஓய்வூதியர்களின் பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.
ஊதிய ஒப்பந்தங்கள் வரும்போது ஓய்வூதியர்களுக்கு ஊதிய விகித ஒப்பந்தப் பலனைக் கொடுக்க வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
கருணை அடிப்படையில், விண்ணப்பித்து காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.
2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்துள்ளவர்களுக்குப் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும்.
15-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
இந்த 6 அடிப்படையான கோரிக்கைகள் மீது பதில் என்ன எனக் கேட்டோம். அவர்கள் கூறிய பதிலில் பொங்கலுக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தலாம் என அமைச்சர் கூறியிருப்பதாகக் கூறினார்கள். அவகாசம் கோரியிருந்தார்கள். இந்தப் பதிலில் எங்களுக்கு எந்தத் திருப்தியும் இல்லை. இதை ஏற்க முடியாது என அனைத்து சங்கங்களும் அறிவித்துவிட்டார்கள்.
15-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை கோரிக்கையைத் தவிர மற்ற கோரிக்கைகள் அனைத்தும் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் கோரிக்கைகள். மீண்டும் அவகாசம் கேட்பது எங்களை ஏமாற்றுவதைப் போல உள்ளது.
உறுதியான பதில் வேண்டும் என நாங்கள் கோருகிறோம். அவர்களிடம் அந்தப் பதில் இல்லை.
ஒரு வேலைநிறுத்தம் என்பது இந்தப் பொங்கலுக்கு முன் நடந்துவிடக் கூடாது என்பதற்காக மற்ற கோரிக்கைகளில் சமரசம் செய்துகொள்ளலாம் என தொழிற்சங்கங்கள் நினைத்தாலும், ஓய்வுபெற்றவர்களின் பஞ்சப்படி விஷயத்தில் மட்டும் எந்த சமரசமும் செய்ய முடியாது. இந்தப் பொங்கலுக்கு முன் அவர்களுக்கு இதை வழங்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நிவாரணம் என்பதையாவது அவர்கள் ஏற்க வேண்டும் என நிறைய ஆலோசனைகள் வழங்கினோம்.
இருந்தபோதிலும், பொங்கலுக்கு முன்பு எதையாவது தருகிறோம் என்ற வார்த்தையை அவர்கள் கூறவில்லை. எனவே இந்தப் பேச்சுவார்த்தையில் எங்களுக்குத் திருப்தி இல்லை. இதை முழுமையாக ஏற்க நாங்கள் தயாராக இல்லை.
இதையடுத்து, தொழிற்சங்கங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தினோம். வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு வந்துள்ளோம். எனவே, ஜனவரி 9 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக முடிவெடுத்துள்ளோம்.
அண்ணா திராவிட முன்னேற்ற கழக சங்கம் அவர்களது தலைமையில் கூட்டமைப்பு உள்ளது. சிஐடியூ தலைமையில் ஒரு கூட்டமைப்பு உள்ளது. இரு கூட்டமைப்புகளும் இணைந்து ஜனவரி 9 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.
அரசாங்கம் பொங்கலுக்கு முன் எங்களது கோரிக்கையில் மாற்றங்களைச் செய்தால் வேலைநிறுத்தத்தைத் தவிர்க்கலாம். அனைத்துத் தொழிலாளர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளார்கள்" என்றார் அவர்.