தமிழ்நாடு

'இனி நண்பர்கள்': முடிவுக்கு வந்த போக்குவரத்துத் துறை, காவல் துறை மோதல்!

"இரு துறைகளைச் சேர்ந்தவர்களும் இனி நண்பர்களாகப் பணியாற்றுவோம்."

கிழக்கு நியூஸ்

போக்குவரத்துத் துறை, காவல் துறை இடையிலான மோதலுக்குக் காரணமாக அமைந்த அரசுப் பேருந்து நடத்துநர் மற்றும் ஆயுதப் படைக் காவலர் பரஸ்பரம் வருத்தம் தெரிவித்துக்கொண்டார்கள்.

நாகர்கோயிலிலிருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் ஆயுதப் படைக் காவலர் ஆறுமுகப்பாண்டி என்பவர் அண்மையில் பயணம் செய்தார். இந்தப் பயணத்தின்போது தான் காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என்று நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்புடைய காணொளி சமூக ஊடகங்களில் பிரபலமானது. இதைத் தொடர்ந்து, அரசுப் பேருந்தில் கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ள காவல் துறையினருக்கு அனுமதியில்லை என போக்குவரத்துத் துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இது மாநிலம் முழுவதும் கவனம் ஈர்த்ததைத் தொடர்ந்து, அரசுப் பேருந்து ஓட்டுநர்களைக் குறி வைத்து போக்குவரத்துக் காவல் துறையினர் அபராதம் விதிக்கத் தொடங்கினார்கள். ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியாதது, வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லாத இடங்களில் அரசுப் பேருந்து நிறுத்தப்படுவது உள்ளிட்டவற்றுக்கு காவல் துறையினர் அபராதம் வசூலித்தார்கள்.

இதனால், போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறை இடையே மோதல் போக்கு நீடிக்கத் தொடங்கியது. இந்த மோதல் போக்கைத் தடுத்து நிறுத்துமாறு தொழிற்சங்கங்கள் அரசை வலியுறுத்தியது.

இரு துறைச் செயலர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு விவகாரம் பெரிதானது. முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

போக்குவரத்துத் துறைச் செயலர் பனீந்திர ரெட்டி மற்றும் உள்துறைச் செயலர் அமுதா ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்கள்.

இந்த நிலையில், பிரச்னைக்கு விதை தூவிய ஆயுதப் படைக் காவலர் மற்றும் அரசுப் பேருந்து நடத்துநர் ஆகியோர் சுமூகமாகப் பேசி பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்கள். தேநீர் அருந்திக்கொண்டு இருவரும் பேச்சுவார்த்தை நடத்தும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தக் காணொளியில் இருவரும் பரஸ்பரம் வருத்தம் தெரிவித்துக்கொண்டார்கள்.

"நாம் இருவரும் பொதுத்துறையில் பணிபுரிபவர்கள். பேருந்தில் வந்தபோது, உங்களுடையக் கருத்தை நீங்கள் பகிர்ந்தீர்கள், என்னுடைய கருத்தை நான் பகிர்ந்தேன். இதன்பிறகு, பயணச்சீட்டு பெற்று பயணம் மேற்கொண்டீர்கள். ஆனால், சமூக ஊடகங்களில் இது பரவியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார் நடத்துநர்.

"நானும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இரு துறையைச் சேர்ந்தவர்களும் இனி நண்பர்களாகப் பணியாற்றுவோம்" என்றார் ஆயுதப் படைக் காவலர்.

இந்த உரையாடலைத் தொடர்ந்து, இருவரும் கட்டியணைத்து கைக்குலுக்கி தேநீர் அருந்தி சமாதானம் அடைந்தார்கள்.