ரயில் பயணிகளை அச்சுறுத்திய துணை ராணுவப் படையினர்? 
தமிழ்நாடு

ரயில் பயணிகளை அச்சுறுத்திய துணை ராணுவப் படையினர்?

யோகேஷ் குமார்

சென்னையில் இருந்து கோவை சென்ற ரயிலில் துணை ராணுவப் படையினர் பயணிகளை மிரட்டி அச்சுறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு 9.00 மணிக்கு கோவையை நோக்கி சென்ற ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் 20-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் பயணித்துள்ளனர். இந்நிலையில் ரயில் பெட்டிக்குள் துணை ராணுவப் படையினர் தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் தூங்க முடியாமல் பயணிகள் தவித்துள்ளதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து துணை ராணுவப் படையினருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளனர். இதன் பிறகு ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் பிறகு ரயில்வே காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினரை ரயிலில் இருந்து வெளியேற்றினால் தான் நாங்கள் மீண்டும் பயணம் செய்வோம் எனக் கூறி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் துணை ராணுவப் படையினரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அவர்களை ரயிலை விட்டு வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் அந்த ரயில் புறப்பட்டு சென்றது. இது குறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.