நாம் எந்த குடும்ப சூழ்நிலையில் இருந்து வருகிறோம் என்பதோ, எங்கு படிக்கிறோம் என்பதோ முக்கியமல்ல, குறிக்கோளுடன் படிக்கவேண்டும் என்பதே முக்கியம் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள வி. நாராயணன்.
வரும் ஜன. 14-ல் இஸ்ரோவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன். இந்நிலையில் கன்னியாகுமரியில் உள்ள மேலக்காட்டுவிளையில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது:
`என் சொந்த உழைப்பைத் தாண்டி, நான் நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில் பெற்றோர் என்னைப் படிக்க வைத்தனர். பிற்காலத்தில் என் மனைவி மற்றும் குடும்பத்தினர் எனக்காக நிறைய தியாகங்களைச் செய்தனர். பெரும்பாலும் நான் அலுவலகத்திலேயே இருக்கும்படியான சூழல் இருந்ததால், அவர்கள் நிறைய அனுசரித்துச் சென்றனர்.
இஸ்ரோ நிறுவனத்தை வழிநடத்திய அனைவருமே மேன்மக்கள். விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், யு.ஆர். ராவ், கஸ்தூரி ரங்கன், மாதவன் நாயர், ராதாகிருஷ்ணன், கிரண் குமார், சிவன், சோம்நாத் என மிகப்பெரிய திறமைசாலிகள் வழிநடத்திய அமைப்பைத் தலைமையேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
இறைவனுக்கும், பிரதமருக்கும், அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். எங்கள் அமைப்பு வெற்றிகரமானதாக மாறியதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதில் மிக முக்கியமாக, தனிநபரைக் காட்டிலும் இந்த தேசமும், இஸ்ரோ அமைப்புமே எங்களுக்குப் பெரிது என்கிற எண்ணம். அத்துடன் அனைவருமே கடின உழைப்பாளிகள்.
இஸ்ரோ என்பது பலரின் கூட்டு முயற்சி. என் உறவினர்கள் அனைவரின் ஆசிர்வாதங்களையும் பெறவே நான் இங்கு வந்துள்ளேன். மாணவர்களுக்கு நான் கூறிக்கொள்வது ஒன்றுதான், நாம் எந்த குடும்ப சூழ்நிலையில் இருந்து வருகிறோம் என்பதோ, எங்கு படிக்கிறோம் என்பதோ முக்கியமல்ல. எப்படிப் படிக்கிறோம் என்பதே முக்கியம்.
மேலும், மாணவர்களுக்குப் படிப்பு மட்டுமே முக்கியமல்ல, சுய மேம்பாட்டுத் திறனை வளர்த்துக்கொள்வதும் முக்கியம். நன்றாகப் படிக்கவேண்டும், அதேநேரம் குறிக்கோளுடன் படிக்கவேண்டும். நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் படிக்கவேண்டும்’ என்றார்