ANI
தமிழ்நாடு

குரூப் 4 தேர்வு: தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியீடு

கிழக்கு நியூஸ்

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இணையதளம் வாயிலாகத் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளைநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், தட்டச்சர் உள்பட 6,244 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜனவரி 30-ல் வெளியிட்டது.

தேர்வுக்கான விண்ணப்பத்தை இணையவழியில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கடைசி நாள் பிப்ரவரி 28. விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, சரிபார்க்கவும் அதில் பிழை திருத்தம் செய்யவும் மார்ச் 4 முதல் மார்ச் 6 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

குரூப் 4 தேர்வானது ஜூன் 9 காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இரண்டு பிரிவுகளாகத் தேர்வு நடத்தப்படுகிறது. 10-ம் வகுப்பு அடிப்படையில் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. தகுதி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR Dashboard) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.