தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (குரூப் 4) முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுகள் நடத்தி வருகிறது. காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதனடிப்படையில் தற்போது கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், வனக்காவலர், வனக் காப்பாளர்கள் உள்ளிட்ட 4,662 பணியிடங்களுக்காகத் தேர்வு அறிவிக்கப்பட்டது.
முன்னதாக ஏற்கெனவே 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த நிலையில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இவற்றுக்கான குரூப் 4 தேர்வு, கடந்த ஜூலை 12 அன்று நடத்தப்பட்டது. இதில், 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 11,48,019 பேர் தேர்வு எழுதினர்.
இதையடுத்து தேர்வு முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. அதன்படி தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை https://tnpscresults.tn.gov.in என்ற வலைத்தளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.