ஒருங்கிணைந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று (டிச.12) வெளியிடப்பட்டன.
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், வனக் காவலர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர்கள், இந்து சமய அறநிலையத்துறை தணிக்கை ஆய்வாளர், கூட்டுறவு மூத்த ஆய்வாளர் உள்ளிட்ட குரூப் 2 மற்றும் 2ஏ நிலையில் உள்ள 2,327 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை கடந்த ஜுன் 20-ல் வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.
இதை தொடர்ந்து, மொத்தம் 7.93 லட்சம் பேர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்ததாக தகவல் வெளியானது. இதனை அடுத்து கடந்த செப். 14-ல் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை முதல்நிலை தேர்வு நடைபெற்றது.
அதன்பிறகு, கடந்த நவ.8-ல் இந்தத் தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் 213 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2540 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று (டிச. 12) வெளியாகியுள்ளன.
https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் இந்தத் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் பிப்ரவரி 2 மற்றும் 23-ல் முதன்மைத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.