குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. இன்று (ஜூலை 15) வெளியிட்டுள்ளது.
உதவி ஆய்வாளர் (தொழிலாளர் நலத்துறை), இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத்திறனாளி), சர் பதிவாளர் (இரண்டாம் நிலை), வனவர் (வனத்துறை, தமிழ்நாடு வனத்தோட்ட கழகம்), உதவியாளர் - சிறப்புப் பிரிவு (சென்னை பெருநகர காவல், குற்றப் புலனாய்வு) உள்ளிட்ட பதவிகளுக்கான 50 காலிப் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 2 (குரூப் 2) தேர்வு அறிக்கையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
அதேபோல, மூத்த ஆய்வாளர் (பால்வளத்துறை), தணிக்கை ஆய்வாளர் (இந்து சமய அறநிலையத்துறை), உதவியாளர் - மூன்றாம் நிலை (தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்), உதவியாளர் (வணிகவரித்துறை), மூத்த வருவாய் ஆய்வாளர் (வருவாய்த்துறை) உள்ளிட்ட பதவிக்கான 595 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2ஏ தேர்வு அறிக்கையும் வெளியாகியுள்ளது.
இதில் கலந்துகொள்ள விரும்பும் தேர்வர்கள், இன்று (ஜூலை 15) தொடங்கி ஆகஸ்ட் 13 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதோடு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஆகஸ்ட் 18 முதல் 20 வரை இணையவழியில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
28 செப்டம்பர் அன்று, காலை 9.30 தொடங்கி நண்பகல் 12.30 வரை முதல்நிலைத் தேர்வு நடைபெறுவுள்ளது. முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்போது, முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள் குறித்த தகவல் வெளியிடப்படும்.
மேலும் தகவல்களுக்கு: tnpsc.gov.in மற்றும் tnpscexams.in