தமிழ்நாடு

தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம்

தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் தொடர்பாக தேர்தல் அறிக்கையில் திமுக வெளியிட்ட அறிவிப்புகளைத் தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்

ராம் அப்பண்ணசாமி

31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்துக்கு வெளியே போராட்டம் நடந்து வருகிறது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்க தற்செயல் விடுப்பு எடுத்து தமிழ்நாடு முழுவதிலும் இருந்து டிபிஐ வளாகத்துக்கு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் வந்த வண்ணம் உள்ளனர். டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்த வரும் ஆசிரியர்களைத் தொடர்ச்சியாகக் கைது செய்து வருகிறது தமிழக காவல்துறை.

மத்திய அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், ஆசிரியர்களின் பதவி உயர்வை தடுக்கும் வகையில் இருக்கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், என 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் தொடர்பாக தேர்தல் அறிக்கையில் திமுக வெளியிட்ட அறிவிப்புகளை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பதும் போராட்டத்தில் ஈடுபவர்களின் கோரிக்கையாக உள்ளது.

`தமிழக அரசு எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நாங்கள் விடுத்துள்ள 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். அப்படி நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை நோக்கி அரசால் நாங்கள் தள்ளப்படுகிறோம் என்று அர்த்தம். எங்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 22-ல் தமிழக அரசின் புதிய பள்ளிக்கல்வித்துறை செயலாளரைச் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினோம்.

கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன் என்று சொன்னார். ஆனால் இப்போது அதை அரசு நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு இல்லாததால்தான் இன்று போராட்டம் நடத்துகிறோம்‘ என்று புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சங்கங்களின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன்.