கரூரில் தவெக பரப்புரையின்போது என்ன நடந்தது என்பது குறித்தும் சமூக ஊடகங்களில் வைக்கப்படும் கேள்விகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடந்த தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஒரு நபர் ஆணையமாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டு, விசாரித்து வருகிறார். காவல்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கரூரில் சம்பவத்தன்று நடந்தது என்ன என்பது குறித்தும், அச்சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கான விளக்கங்களையும் அரசு அதிகாரிகள் அளித்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் அமுதா ஐஏஎஸ் தலைமையில் காவல்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சிறப்பு டிஜிபி வெங்கட்ராமன், சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார், உள்துறை செயலர் தீரஜ் குமார் ஆகிய அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
முன்னதாக கரூர் பரப்புரை எப்படி நடந்தது என்பது குறித்த முழு காணொளி அரசு தரப்பில் திரையிடப்பட்டது. அந்தக் காணொளியில், தவெக பொதுச்செயலாளர் கரூர் பரப்புரை குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் தொடங்கி, விஜய் சென்னையில் இருந்து எப்போது புறப்பட்டார், நாமக்கல்லில் எப்போது பேசி முடித்தார், அப்போது நாமக்கல்லில் தவெக தொண்டர்கள் என்னென்ன செய்தார்கள், அதே நேரத்தில் கரூரில் மக்கள் கூட்டம் எப்படி இருந்தது, நாமக்கல் முதல் கரூர் வரும் வரை பிரசார வாகனத்தைச் சூழ்ந்தபடி தவெக தொண்டர்கள் எப்படி வந்தார்கள், மக்கள் தண்ணீர் இன்றி தவித்த காட்சிகள் போன்ற அனைத்துக் காட்சிகளையும் ஊடக நேரலைக் காணொளிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்த காணொளிகளின் அடிப்படையில் தொகுப்பாகத் திரையிடப்பட்டது.
அதன் பிறகு சமூக ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் அரசின் நடவடிக்கை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளித்தனர். முதலாவதாக தவெக பரப்புரைக்கு வழங்கப்பட்ட இடம் குறித்த கேள்விக்கு அமுதா ஐஏஎஸ் கூறியதாவது:-
”கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக 7 இடங்களைப் பட்டியலிட்டு, ஏதேனும் ஒரு இடத்தில் அனுமதி வழங்குமாறு தவெக சார்பில் கோரப்பட்டது. அது குறித்து காவல்துறையும் தவெக சார்பிலும் கலந்தாலோசனை செய்யப்பட்டு, செப்டம்பர் 25 அன்று ஒரு இடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அதே நாளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் வேலுச்சாமிபுரத்திலேயே அனுமதி கோரி தவெக தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. தவெக அனுமதி கேட்ட கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் பெட்ரோல் பன்க் மற்றும் வடிகால் கால்வாய் இருந்ததால் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டது. தவெக கேட்ட உழவர்சந்தை பகுதியில் உள்ள சாலை 30 முதல் 40 அடி நீளம் உடையது. ஆனால் அனுமதி வழங்கப்பட்ட வேலுச்சாமிபுரத்தின் சாலை 60 அடி நீளம் உடையது ஆகும்”
என்று விளக்கமளித்தார். கூட்டத்தின் எண்ணிக்கை குறித்து கணிக்க முடியவில்லையா என்ற கேள்விக்கு,
“தவெக சார்பில் வழங்கப்பட்ட கடிதத்தில் 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு முந்தைய தவெக பரப்புரைகளைக் கணக்கில் கொண்டு 20,000 பேர் வருவார்கள் எனக் காவல்துறை சார்பில் கணிக்கப்பட்டது. பொதுவாக 50 நபர்களுக்கு ஒரு காவலர் என்ற அளவில்தான் காவலர்கள் ஒதுக்கப்படுவார்கள். ஆனால் கரூர் பரப்புரைக்கு 20 நபர்களுக்கு ஒரு காவலர் என்ற விகிதத்தில் காவலர்கள் ஒதுக்கப்பட்டிருந்தார்கள். ஆக 10,000 பேருக்கு 500 காவலர்களை ஒதுக்கியிருந்தார்கள். ஏற்கெனவே கரூரில் 20,000 பேருக்கு மேல் திரண்டுவிட்டனர். விஜயின் பரப்புரை வாகனத்துடன் கூடுதலாக மக்கள் வந்ததால் அப்பகுதியில் கூட்டம் அதிகமானது” என்று கூறினார்.
பரப்புரையின்போது மின்சாரம் நிறுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, கரூர் மின்வாரியத்தின் நிர்வாக இயக்குநர் வழங்கிய விளக்கக் காணொளி திரையிடப்பட்டது. அதில் பரப்புரையின்போது தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டது. சாலை மின் விளக்குகள், கடைகளில் விளக்குகள் எரிந்தன. தவெக சார்பில் மின் இணைப்பைத் துண்டிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையும் முன்னரே நிராகரிக்கப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காணொளியில், தவெக தொண்டர்கள் ஜெனரேட்டர் வைத்திருந்த பகுதிக்குள் நுழைந்ததும் குறிப்பிட்ட மின் விளக்கு மட்டும் இணைப்பு துண்டிக்கப்படும் காட்சி காட்டப்பட்டது.
தொடர்ந்து, காவலர்கள் தடியடி நடத்தினார்களா என்ற கேள்விக்கு,
“ஏற்கெனவே வேலுச்சாமிபுரத்தில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. விஜய் வரும்போது அவருடனும் மக்கள் வந்ததால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அவரது வாகனம் நகர முடியாதபடி நின்றது. இதையடுத்து காவலர்கள் அங்கிருந்தவர்களை விலக்கி, விஜயின் வாகனத்திற்கு வழி விட்டார்கள். அவர்களுக்கு தன் பரப்புரையின்போதே விஜய் நன்றியும் தெரிவித்தார்” என்று கூறினார்.
“பரப்புரை தொடங்குவதற்கு முன்பே மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. மதியம் 3 மணி அளவிலேயே அதிகமாக மக்கள் குவியத் தொடங்கினார்கள். விஜய் பெரிய வாகனத்தில் வந்தார். அது முன்னேறிப் போக வேண்டும் என்றால் இரு பக்கங்களிலும் நிற்பவர்கள் விலகி உள்ளே செல்ல வேண்டும். அப்படிப் போனபோதுதான் மக்கள் நெரிசலை உணர்ந்தார்கள். வாகனத்திற்கு முன்பு இருந்தவர்களும் பக்கங்களில் திரண்டார்கள். பின்னால் வந்தவர்களும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினார்கள். அதனால்தான் நெரிசல் ஏற்பட்டது”
என்று விளக்கினார். பரப்புரை கூட்டத்தின்போது எப்படி அத்தனை ஆம்புலன்ஸுகள் விரைவாக வந்தன என்ற கேள்விக்கு,
“பெரிய கூட்டம் என்பதால் ஏற்பாடு செய்தவர்களே 7 ஆம்புலன்ஸ்களை வைத்திருந்தார்கள். அரசு தரப்பில் கூடுதலாக கரூர் மாவட்டத்தில் இருந்த 6 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டன. அதன் பின்னர் அவசர நிலையை உணர்ந்த பிறகு தனியார் ஆம்புலன்ஸ் உடப்ட பல ஆம்புலன்ஸ்கள் வரத் தொடங்கின. மொத்தம் 33 ஆம்புலன்ஸ்கள் வந்தன.” என்று விளக்கமளித்தார்.