தமிழ்நாடு

யுபிஎஸ்சி தேர்வர்களுக்கான நான் முதல்வன் திட்டம்: தமிழக அரசின் ஊக்கத்தொகையைப் பெறுவது எப்படி?

ராம் அப்பண்ணசாமி

யுபிஎஸ்சி-யின் அகில இந்தியக் குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்குவதற்கான தேர்வு அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ், நான் முதல்வன் திட்டம் 2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு முதல்நிலைத் தேர்வை எழுதும் 1000 தமிழக மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் தலா ரூ. 7,500 ஊக்கத்தொகை 10 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. முதல்நிலைத் தேர்வுகளில் வெற்றி பெற்ற 450 பேருக்கு மெயின்ஸ் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்காகத் தலா ரூ. 25,000 வழங்கப்பட்டது. இவர்களில் இருந்து 42 பேர் தேர்ச்சி பெற்றார்கள்.

இந்நிலையில் 2025-2026 வருடத்துக்கான முதல்நிலைத் தேர்வை எழுதும் மாணவர்களில் ஊக்கத்தொகையைப் பெறவுள்ள 1000 பேரைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

ஊக்கத் தொகைக்கான தேர்வில் கலந்து கொள்ள naanmudhalvan.tn.gov.in என்கிற இணையத்தளத்தில், ஆகஸ்ட் 2 முதல் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணபிக்கத் தொடங்கலாம். ஆகஸ்ட் 17 விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி.

செப்டம்பர் 9-ல் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் என்றும் செப்டம்பர் 15-ல் தேர்வு நடத்தப்படும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.