தமிழ்நாடு

குடியரசு நாள்: தேசியக் கொடியைப் பறக்கவிட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி

தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு...

கிழக்கு நியூஸ்

குடியரசு நாளை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையில் இன்று தேசியக் கொடியைப் பறக்கவிட்டார்.

நாடு முழுவதும் இன்று 76-வது குடியரசு நாள் விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு நாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தார். இவரைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என். ரவி வருகை தந்தார். ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.

காலை 8 மணியளவில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியைப் பறக்கவிட்டார். ஆளுநர் கொடியேற்றியபோது, இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் தேசியக் கொடிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, முப்படை வீரர்கள் மற்றும் காவல் துறை அணிவகுப்பு மரியாதை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி விருதாளர்களைக் கௌரவித்தார். வீர தீர செயலுக்கான அண்ணா விருது க. வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த எஸ்ஏ அமீர் அம்சாவுக்கு வழங்கப்பட்டது. அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை உழவர் நலத் துறைக்கான சிறப்பு விருது தேனி மாவட்டம் முருகவேலுக்கு வழங்கப்பட்டது. காந்தியடிகள் காவலர் பதக்கத்தைப் பெற மத்திய நுண்னறிவுப் பிரிவு காவலர் சின்ன காமணனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த காவல் நிலையத்துக்கான கோப்பைகளை வழங்கினார். முதல் இடம் மதுரை, இரண்டாவது இடம் திருப்பூர், மூன்றாவது திருவள்ளூர்.

விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. இறுதியில் நாட்டுப் பண் ஒலிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என். ரவி அங்கிருந்து ஆளுநர் மாளிகை நோக்கிப் புறப்பட்டார். ஆளுநரைத் தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலினும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தில்லியில் கொடியேற்றிய குடியரசுத் தலைவர்

தில்லியில் குடியரசு நாள் நிகழ்ச்சியில் செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு. 21 பீரங்கிக் குண்டுகள் முழங்க தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். குடியரசு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.