அரசியல் கட்சிகளின் பிரசாரம், சாலை வலம் உள்ளிட்டவற்றுக்கு வழிகாட்டு விதிமுறைகள் அமைப்பது தொடர்பான வரைவு அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த அக்டோபர் 27 அன்று, அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை 10 நாள்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த நவம்பர் 6 அன்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளையும் கூட்டி தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதில், பொதுக்கூட்டங்கள் நடத்த அரசியல் கட்சிகளுக்கு வைப்புத் தொகை நிர்ணயிப்பது உள்ளிட்ட பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நவம்பர் 20-க்குள் வரைவு வழிகாட்டு விதிமுறைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அரசியல் கட்சிகளின் பிரசாரங்களுக்கான வழிகாட்டு விதிமுறைகளின் வரைவு அறிக்கையைத் தமிழ்நாடு அரசு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், இது தொடர்பான 25 பக்க அறிக்கை மற்றும் ஆவணங்களைத் தாக்கல் செய்தார். அப்போது, ஒவ்வொரு விதிக்கும் ஒவ்வொரு கட்சி எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதால் அறிக்கையின் நகலை அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் மனுதாரர்களாக உள்ள அதிமுக, தவெக, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு மட்டும் அறிக்கையின் நகலை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 27-க்கு ஒத்திவைத்தனர்.
The Tamil Nadu government filed a draft report in the Madras High Court regarding the establishment of SOP for political parties' public campaigns, road shows.