தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு!: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு | Special Intensive Revision |

பிஎல்ஓக்களின் ஊக்கத்தொகையும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களின் ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது...

கிழக்கு நியூஸ்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் ஊதியத்தை ரூ. 12,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதை முன்னிட்டு 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதில், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொண்டு, வாக்காளர்களின் முகவரி உள்ளிட்ட தகவல்கள் உறுதி செய்யும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பில் கலெக்டர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் போன்றோர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 68,467 வாக்குசாவடி நிலை அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைவிட கூடுதலாகப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 5 வரை இப்பணிகள் நடைபெறவுள்ளன. இதில் இதுவரை ஏறத்தாழ 90%-க்கும் அதிகமானோருக்கு வாக்காளர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே பணி நெருக்கடி காரணமாக, வாக்காளர் திருத்தப் பணிகளை நேற்று முதல் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் புறக்கணிப்பதாகத் தெரிவித்தது. இந்நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஊதியம் ரூ. 6,000-ல் இருந்து இரு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.12,000 ஆக வழங்கப்படவுள்ளது. அத்துடன் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகையும் ரூ. 1,000-ல் இருந்து ரூ. 2,000 ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ. 12,000-ல் இருந்து ரூ. 18,000 ஆகவும் உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Tamil Nadu government has issued an order increasing the salary of Booth level officers who carry out special intensive revision work to Rs. 12,000.