தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் மாதம் கூடிய நிலையில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்குத் துணை வேந்தரை நியமிக்கவும் பதவி நீக்கம் செய்யவும் தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு. பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் நிதித்துறை செயலாளரை உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கலாம் என்பது உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால், அவர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் ஆளுநரின் முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது
அந்த மனுவில், ஆளுநரின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது என அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களை ஒப்புதலின்றி நிறுத்தி வைப்பதும், சிலவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதும் அரசியலமைப்பை மீறிய செயல் ஆகும். இது மாநில சட்டமன்றத்தின் அதிகாரத்தை தகர்க்கும் நோக்கம் கொண்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஆளுநர் பல மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஆளுநர்கள் மசோதாக்களை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது என்று திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தற்போது தொடர்ந்திருக்கும் மனு விரைவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.