கலைஞர் பல்கலைக்கழக மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று கடந்த ஏப்ரம் மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் தாக்கல் செய்தார்.
அந்த மசோதாவில் பல்கலைக்கழக வேந்தாராக மாநில முதல்வர் இருப்பார். அவரே பல்கலைக்கழகத் தலைவராகவும் பட்டமளிப்பு விழா போன்றவற்றில் தலைமை வகிப்பவராகவும் இருப்பார். வேந்தரிடம் அனுமதி வழங்காமல் கௌரவப் பட்டங்கள் வழங்கப்படாது. பல்கலைக்கழக இணைவேந்தராக உயர்க்கல்வித்துறை அமைச்சர் செயல்படுவார், துணைவேந்தர் தேடல் குழுவில் உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், அரசின் பிரதிநிதியாகக் கல்வியாளர் ஒருவரும், சிண்டிகேட் பிரதிநிதியாக மாநில அல்லது மத்திய பல்கலைக்கழக துணைவேந்தரும் இடம்பெறுவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை அவர் மேல் அனுமதிக்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை முடிவுக்கு எதிராக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மசோதாவைக் குடியரசுத் தலைவரிடம் அவர் அனுப்பி வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டி, ஆளுநர் ஆர்.என். ரவி மீது தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.