கோப்புப்படம் 
தமிழ்நாடு

தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை கட்டணமில்லா உணவு: தமிழ்நாடு அரசு அரசாணை | TN Govt |

ரூ. 186 கோடி நிதி ஒதுக்கிய அரசாணையுடன், பொது வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...

கிழக்கு நியூஸ்

தூய்மை பணியாளர்களுக்கு காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் உணவு வழங்க ரூ. 186 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. குறிப்பாக, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்களால் கட்டணமின்றி வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்பது உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் தூய்மைப் பணியாளர்களுக்கு கட்டணமின்றி வழங்க சென்னை மாநகராட்சி ஆணையர் செயற்குறிப்புக்கு ஒப்புதல் அளித்து, இப்பணிக்கு ரூ. 186 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“நிதித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தன் கடிதத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று ஆண்டு காலத்திற்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்குவதற்கான செயற்குறிப்பினை அரசிற்கு அனுப்பினார். அதனை அரசு கவனமான பரிசீலனைக்குப் பின்னர் ஏற்று, பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று ஆண்டு காலத்திற்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்குவதற்கான உணவளிப்பு நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணிக்கு ரூ. 186.94 கோடி மதிப்பீட்டில் அனுமதி வழங்கி ஆணையிடுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பொதுவான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.

The Tamil Nadu government has issued a Government Order allocating Rs. 186 crore to provide three meals to sanitation workers.