தமிழ்நாடு அரசின் 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்புக்கு வந்ததிலிருந்து தாக்கல் செய்யப்படும் 4-வது நிதிநிலை அறிக்கை இது. தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக அரசு நேற்று அறிவித்தது.
நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய சட்டப்பேரவை காலை 10 மணிக்குக் கூடியது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வள்ளுவரின் குறளோடு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யத் தொடங்கினார்.
நிதிநிலை அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள்:
நிதிப் பற்றாக்குறை 1 லட்சத்து 8 ஆயிரத்து 690 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.44 சதவீதம்.
அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணிகள் வழங்கப்படும்.
ரூ. 50 கோடி செலவில் புராதனக் கட்டடங்கள் புதுப்பிக்கப்படும்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்கிற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பள்ளி வாசல்கள், தர்காக்களைப் பழுதுபார்க்கவும் சீரமைக்கவும் இந்த ஆண்டு ரூ. 10 கோடி மானியம் வழங்கப்படும். தேவாலயங்களைப் பழுது பார்ப்பதற்கும், சீரமைப்பதற்கும் ரூ. 10 கோடி மானியம் வழங்கப்படும்.
ஆயிரம் ஆண்டுகள் பழமைகொண்ட கோயில்களில் ரூ. 100 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஆதி திராவிட இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் கடன் திட்டத்துக்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு.
அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்துக்காக ரூ. 230 கோடி நிதி ஒதுக்கீடு
மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக ரூ. 12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
மகளிருக்கான இலவசப் பேருந்து கட்டண மானியத்துக்காக ரூ. 3,050 கோடி ஒதுக்கப்படுகிறது.
மாணவர்களுக்கான பேருந்து கட்டண மானியத்துக்காக ரூ. 1,521 கோடி ஒதுக்கப்படுகிறது.
டீசல் மானியத்துக்காக ரூ. 1,500 கோடி ஒதுக்கப்படுகிறது.
சிற்றுந்துப் பேருந்துகள் திட்டம் தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்படவுள்ளன.
500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
மதுரை மற்றும் திருச்சியில் ரூ. 695 கோடி செலவில் இரு புதிய டைடல் பூங்காங்கள் அமைக்கப்படவுள்ளன.
தஞ்சாவூரில் ரூ. 120 கோடி செலவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
கரூர், ஈரோடு, விருதுநகர் மாவட்டங்களில் ரூ. 20 கோடி செலவில் சிறிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.
சேலம், விருதுநகரில் ரூ. 2,483 செலவில் ஜவுளிப் பூங்கா. இதன்மூலம், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இலவச வைஃபை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
மாநில தரவு மையம் ரூ. 200 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.
ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்குப் பயிற்சியளிக்க ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு.
இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்காக அளிக்கப்பட்டு வரும் உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
அனைத்து நிலைகளிலும் மருத்துவக் கட்டமைப்பின் தரத்தை உயர்த்த ரூ. 333 கோடி நிதி ஒதுக்கீடு.
தஞ்சையில் ரூ. 120 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படவுள்ளது.
மாற்றுத் திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
மாற்றுத் திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள்.
கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ. 1,100 கோடி செலவில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா விளாங்குறிச்சியில் அமைக்கப்படவுள்ளது.
கலைஞர் விளையாட்டுத் தொகுப்புகள் அனைத்து ஊராட்சிகளிலும் வழங்கப்படும்.
அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திட தமிழ்ப் புதல்வன் திட்டம் வரும் நிதியாண்டிலிருந்து அறிமுகப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று, உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்க அவர்களது வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ. 1,000 நேரடியாக செலுத்தப்படும். இந்தத் திட்டத்துக்காக ரூ. 360 கோடி ஒதுக்கீடு.
உயர்கல்விக்கு ரூ. 8,212 கோடி நிதி ஒதுக்கீடு.
இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு.
நடப்பாண்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 44,042 கோடி நிதி ஒதுக்கீடு.
அன்பழகன் திட்டத்தின் கீழ் புதிய வகுப்புறைகள். இந்தத் திட்டத்துக்கு ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு.
முதல்வரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரிப் படிப்புக்கான முழுக் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கும்.
10 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ. 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு ரூ. 370 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
மகளிருக்கான அரசு விடுதி திட்டத்துக்கு ரூ. 26 கோடி நிதி ஒதுக்கீடு.
மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டம் மலைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
ரூ. 13,720 கோடி செலவில் மகளிர் நலத் திட்டங்கள்.
மதுரை, சேலம் மாநகராட்சிகளில் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
ரூ. 565 கோடி செலவில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
பூந்தமல்லியில் அதிநவீனத் திரைப்பட நகரத்தை அமைக்க ரூ. 500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
அடையாறு நதி சீரமைக்கப்படும். இதற்காக ரூ. 1,500 கோடி நிதி ஒதுக்கீடு.
வடசென்னையின் வளர்ச்சிக்காக ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு.
சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
ரூ. 100 கோடி செலவில் பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்கள் அழகுபடுத்தப்படும்.
ரூ. 300 கோடி செலவில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாலைகள் அகலப்படுத்தப்படும்.
ஏழைக் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்க தாயுமானவர் வறுமை ஒழிப்பு சிறப்புத் திட்டம்.
5 ஆயிரம் நீர்நிலைகள் புனரமைக்கப்படவுள்ளன. இதற்காகப் பெரிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ரூ. 1,000 கோடி செலவில் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளன.
கிராமப்புறப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
கீழடியில் ரூ. 17 கோடி செலவில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகளுக்காக தொல்லியல் துறைக்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்படும்.
தமிழ்நாட்டிலுள்ள அரிய நூல்களைப் பதிவேற்றம் செய்வதற்காக 2 கோடி நிதி ஒதுக்கீடு.
சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட தமிழ் இலக்கிய நூல்களை மொழிபெயர்க்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மாபெரும் 7 தமிழ்க் கனவுகள் உள்ளன
சமூக நீதி
கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு
உலகை வெல்லும் இளைய தமிழகம்
அறிவுசார் பொருளாதாரம்
சமத்துவ நோக்கில் மகளிர் நலம்
பசுமைவழிப் பயணம்
தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும்
இந்த இலக்கை அடிப்படையாகக் கொண்டே நிதிநிலை அறிக்கை அமையவிருக்கிறது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் தமிழ்நாடு.