கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

தேசிய சின்னத்தை அவமானப்படுத்தும் எண்ணமில்லை: தங்கம் தென்னரசு

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், திமுக அரசு தாக்கல் செய்யவுள்ள கடைசி முழு நிதிநிலை அறிக்கை இது.

கிழக்கு நியூஸ்

தங்களைப் பொறுத்தவரை எந்தவொரு தேசிய சின்னத்தையும் அவமானப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமில்லை என தமிழ்நாட்டு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்னும் சில நிமிடங்களில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினார்.

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், திமுக அரசு தாக்கல் செய்யவுள்ள கடைசி முழு நிதிநிலை அறிக்கை இது. எனவே, இந்த நிதிநிலை அறிக்கை மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தங்கம் தென்னரசு கூறியதாவது:

"இந்த நிதிநிலை அறிக்கை முழுக்க முழுக்க முதல்வரின் வழிகாட்டுதலோடு சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை எதை நோக்கி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பெருநோக்கம் என்ன என்பதை முதல்வர் அழகாகக் கோடிட்டுக்காட்டியிருக்கிறார். அவருடையத் தலைமையிலான திராவிட மாடல் அரசு எல்லார்க்கும் எல்லாம் என்கிற தத்துவத்தின் கீழ் இயங்கி வரக்கூடிய அரசு என்பதை நாம் அனைவரும் மிக நன்றாக அறிவோம். இந்தத் தத்துவத்துக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு மென்மேலும் வித்திடக்கூடிய வகையில் இந்த நிதிநிலை அறிக்கை அமையும்.

எங்களைப் பொறுத்தவரை எந்தவொரு தேசிய சின்னத்தையும் அவமானப்படுத்துவதோ அல்லது அவற்றையெல்லாம் குறைத்து மதிப்பிடுவதோ நிச்சயமாக இல்லை. இந்திய ஒருமைப்பாட்டிலும் இந்திய இறையாண்மையிலும் இந்தியாவின் வளர்ச்சியிலும் பெரு மதிப்பைக் கொண்டிருக்கிறவர்கள்" என்றார் தங்கம் தென்னரசு.