படம்: https://x.com/mkstalin
தமிழ்நாடு

அருந்ததியர் உள்ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

கிழக்கு நியூஸ்

பட்டியலின இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இந்தத் தீர்ப்பின் மூலம், பட்டியலின இடஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு வழங்கப்படும் உள்ஒதுக்கீடு பிரச்னையும் முடிவுக்கு வந்துள்ளது.

தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது!

முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க - அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம்.

இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

ஈவி சின்னையா vs ஆந்திரப் பிரதேச அரசு வழக்கில் 2004-ல் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக பட்டியலின இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.