முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்) படம்: ஏஎன்ஐ
தமிழ்நாடு

கச்சத்தீவு மீட்பு பற்றி இலங்கை பிரதமரிடம் பேச வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்| Srilankan PM |

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

கிழக்கு நியூஸ்

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யாவிடம் கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா மூன்று நாள் பயணமாக இன்று (வியாழக்கிழமை) இந்தியா வந்தடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் உள்ளிட்டோரைச் சந்திக்கவுள்ளார்.

இந்நிலையில் கச்சத்தீவை மீட்பது உள்பட பல்வேறு பிரச்னைகளை இலங்கை பிரதமரிடம் எழுப்புமாறு பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:

"இந்தியாவுக்கு இலங்கை பிரதமர் வருகை தந்திருக்கும் இவ்வேளையில், நாம் தொடர்ந்து வலியுறுத்தி வரும்

கச்சத்தீவு மீட்பு, இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்தல், மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை மற்றும் திருட்டுச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துதல், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை நாட்டுடமையாக்குவதால் உண்டாக்கும் பாதிப்பு, கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டங்களை நடத்துதல் ஆகியவற்றை, பிரதமர் நரேந்திர மோடி எழுப்பக் கோரிக் கடிதம் எழுதியுள்ளேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர், வர்த்தகச் சபை பிரதிநிதிகள், தொழில் துறை அமைப்புகளிடம் கலந்துரையாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியப் பயணத்துக்கு முந்தைய சீனப் பயணத்தில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை கடந்த அக்டோபர் 14 அன்று சந்தித்தார் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா.

Harini Amarasuriya | Srilankan PM | PM Modi | MK Stalin |