படம் : https://x.com/mkstalin
தமிழ்நாடு

வளமான மாநிலமாக தமிழகம் வளர்ந்து வருகிறது: ஆக்ஸ்போர்ட் பல்கலை.யில் முதல்வர் உரை | M.K. Stalin |

பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் நிற்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்...

கிழக்கு நியூஸ்

நமது தமிழகம் வளமான மாநிலமாக வளர்ந்து வருகிறது என்பதே திராவிட இயக்கத்தின் சாதனை என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக ஜெர்மனியில் இருந்து ரூ. 7,202 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தன் பயணத்தின் அடுத்த கட்டமாக லண்டன் சென்றுள்ள முதல்வருக்கு லண்டன் வாழ் தமிழ் மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், இங்கிலாந்தின் பிரபல ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை நேற்று திறந்து வைத்தார்.

அதன் பின்னர் உரையாற்றிய அவர் பேசியதாவது :

நமது தமிழகம் வளமான மாநிலமாகத் திகழ்கிறது. மற்ற மாநிலங்கள் தமிழகத்தின் வளர்ச்சியைக் கண்டு வியந்து வருகின்றன. இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை. நூற்றாண்டு காலமாக உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கி வரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அரங்கில் நான் பேசுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். தமிழக முதல்வர், தேற்காசிய அரசியலைப் புரட்டிப் போட்ட திமுக இயக்கத்தின் தலைவர் என்ற தகுதிகள் மட்டுமன்றி பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் இருக்கிறேன். பெரியாரின் படத்தை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் திறந்து வைப்பதை வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன். ஒடுக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து முன்னேறி, பலர் இங்கு நல்ல நிலையில் இருப்பதை ஐரோப்பிய பயணத்தில் பார்க்க முடிந்தது. சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாக உள்ள எனக்கு இதைவிட பெருமை எதுவும் இருக்க முடியாது. கல்வி, பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, வாழ்க்கை தரம், உள்கட்டமைப்பு வசதியில் தமிழகம் முன்னேறி இருக்கிறது. பட்டினியால் ஏற்படும் மரணம் அற்ற மாநிலமாக தமிழகம் இருக்கிறது” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

CM Stalin | M.K. Stalin | Stalin in London | Periyar | EVR | Stalin speech | CM Stalin speech |