கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

நாளை முதல் பொங்கல் தொகுப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைப்பு

கிழக்கு நியூஸ்

அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1,000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) காலை தொடக்கி வைக்கிறார்.

பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பொங்கல் பண்டிகைக்கும் ரூ. 1,000 ரொக்கம் மற்றும் வேட்டி, சேலை, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருள்கள் தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்தப் பரிசுத் தொகுப்பானது மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து மற்ற குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான டோக்கன் விநியோகப் பணிகள் ஏற்கெனவே நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1,000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு இன்று அறிவித்தது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) காலை ஆழ்வார்பேட்டையில் தொடக்கி வைக்கிறார்.