படம்: https://x.com/TVKPartyHQ
தமிழ்நாடு

24 பேருடைய குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேளுங்கள் முதல்வர் சார்: விஜய் ஆவேசம்

"வெற்று விளம்பர மாடல் திமுக அரசு 'மன்னித்துவிடுங்கள்' மாடல் அரசாக மாறிவிட்டது."

கிழக்கு நியூஸ்

காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டதைப்போல மற்ற 24 பேருடைய குடும்பத்தினரிடமும் முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) மன்னிப்பு கேட்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் (Ajithkumar) மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் காவல் நிலையத்தில் 24 பேர் மரணமடைந்தது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் (Vijay), பொதுச்செயலாளர் என். ஆனந்த் (N Anand), கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் (Arunraj), தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna) உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்றியதாவது:

"திருப்புவனம் மடப்புரம் அஜித்குமார் ஒரு சாதாரண ஓர் எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர். அந்த சாதாரண குடும்பத்துக்கு நடந்த அந்த கொடுமைக்கு முதல்வர் மன்னிப்பு கேட்டார். அதில் தவறில்லை. அதோடு சேர்த்து இதையும் செய்துவிடுங்கள் முதல்வர் சார். உங்களுடைய ஆட்சிக் காலத்தில் காவல் துறை விசாரணையில் 24 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த 24 பேருடைய குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டீர்களா? தயவு செய்து மன்னிப்பு கேட்டுவிடுங்கள். அஜித்குமார் குடும்பத்துக்கு நீங்கள் கொடுத்த நிவாரணத்தைப் போல இந்த 24 பேருடைய குடும்பத்தினருக்கும் நீங்கள் நிவாரணத்தைக் கொடுத்தீர்களா? தயவு செய்து அந்த நிவாரணத்தையும் கொடுத்துவிடுங்கள்.

சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டபோது, இது தமிழ்நாட்டு காவல் துறைக்கு அவமானம் என்று சொன்னீர்கள். இன்று நீங்கள் உத்தரவிட்டிருப்பதற்குப் பெயர் என்னங்க சார்? அதே தானே. அன்று நீங்கள் சொன்னதும் இன்று நடப்பதும் அதே தானே. அதே சிபிஐ தானே. ஆர்எஸ்எஸ், பாஜகவின் கைப்பாவையாகத்தான் சிபிஐ இருக்கிறது.

ஏன் அங்கு சென்று ஒளிந்துகொள்கிறீர்கள். காரணம், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் ஒரு சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலிமையாகக் கேட்டுள்ளோம். அதனால், அந்தப் பயத்தால் ஒன்றியத்தின் ஆட்சிக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறீர்கள்.

உங்களுடைய ஆட்சியில் இன்னும் எத்தனை கொடுமைகள்... அண்ணா பல்கலைக்கழக வழக்கு முதல் அஜித்குமார் வழக்கு வரை எல்லாத்துக்கும் நீதிமன்றம் தலையிட்டு உங்களுடைய அரசைக் கேள்விகளைக் கேட்டு வருகிறது. எல்லாவற்றிலும் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு சார்? உங்களுடைய ஆட்சி எதற்கு சார்? நீங்கள் அமர்ந்திருக்கும் முதல்வர் பதவி எதற்கு சார்?

எப்படி கேள்விகளைக் கேட்டாலும் உங்களிடமிருந்து எந்தப் பதிலும் வரப்போவதில்லை. பதில் இருந்தால் தானே வரும். அதிகபட்சம் உங்களிடமிருந்து வரும் பதில் மன்னித்துவிடுங்கள், தெரியாமல் நடந்துவிட்டது, நடக்கக் கூடாது நடந்துவிட்டது, மன்னித்துவிடுங்கள்... அவ்வளவுதானே.

வெற்று விளம்பர மாடல் திமுக அரசு 'மன்னித்துவிடுங்கள்' மாடல் அரசாக மாறிவிட்டது. இப்படி இருக்கிற திறனற்ற இந்த அரசு, ஆட்சியைவிட்டு செல்லும் முன் நீங்கள் செய்த எல்லா தவறுகளுக்கும் பரிகாரமாக சட்டம் ஒழுங்கை சரிசெய்தாக வேண்டும். இல்லையென்றால், மக்களோடு மக்களாக ஒன்றாக நின்று உங்களை சரி செய்ய வைப்போம். தவெக சார்பில் அத்தனை போராட்டங்களும் எடுத்து நடத்தப்படும்" என்றார் விஜய்.